ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை விரைந்து எட்டிய வீரர்: கே.எல்.ராகுல் சாதனை | kl rahul becomes fastest to reach 5000 run in ipl cricket
லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000+ ரன்களை விரைவாக எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் கே.எல்.ராகுல். செவ்வாய்க்கிழமை அன்று லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த சாதனையை அவர் படைத்தார்.
நடப்பு சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ராகுல் விளையாடி வருகிறார். தனது 130-வது ஐபிஎல் இன்னிங்ஸில் 5,000+ ரன்களை அவர் எட்டினார். இதற்கு முன்பு 135 ஐபிஎல் இன்னிங்ஸில் 5,000+ ரன்களை எட்டியிருந்தார் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். தற்போது வார்னர் சாதனையை ராகுல் முந்தியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000+ ரன்களை கடந்த 8-வது பேட்ஸ்மேனாக ராகுல் அறியப்படுகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 8,326 ரன்களுடன் கோலி முதலிடத்தில் உள்ளார்.
லக்னோ உடனான ஆட்டத்தில் 42 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார் ராகுல். இதுவரை ஹைதராபாத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளில் ராகுல் விளையாடி உள்ளார். தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டு சீசன் முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாடி வருகிறார். 130 இன்னிங்ஸில் விளையாடி 5,006 ரன்கள் எடுத்துள்ளார். 40 அரை சதம், 4 சதம் விளாசி உள்ளார். பேட்டிங் சராசரி 46.35. ஸ்ட்ரைக் ரேட் 135. 425 ஃபோர்கள், 203 சிக்ஸர்கள் விளாசி உள்ளார்.
குறைந்த இன்னிங்ஸில் 5,000 ரன்கள் எட்டிய பேட்ஸ்மேன்கள் @ ஐபிஎல்
- கே.எல்.ராகுல் – 130 இன்னிங்ஸ்
- டேவிட் வார்னர் – 135 இன்னிங்ஸ்
- விராட் கோலி – 157 இன்னிங்ஸ்
- ஏபி டிவில்லியர்ஸ் – 161 இன்னிங்ஸ்
- ஷிகர் தவாண் – 168 இன்னிங்ஸ்