EBM News Tamil
Leading News Portal in Tamil

பாகிஸ்தான் சூப்பர் லீகில் முதல் அரை சதம் விளாசிய டேவிட் வார்னர்! | David Warner scores his first half century in Pakistan Super League


கராச்சி: இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போல பாகிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் நடைபெற்று வருகிறது. இந்த லீகில் முதல் முறையாக பங்கேற்று விளையாடி வருகிறார் ஆஸி. ஜாம்பவான் டேவிட் வார்னர். கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், முதல் முறையாக இந்த லீகில் அரை சதம் பதிவு செய்துள்ளார்.

38 வயதான அவர், உலக அளவில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். 2009 முதல் 2024-ம் ஆண்டு சீசன் வரையில் ஐபிஎல் அரங்கில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிக்காக விளையாடி உள்ளார். அவர் தலைமையில் 2016-ம் ஆண்டு சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது ஹைதராபாத். இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனை முன்னிட்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்த சூழலில் பாகிஸ்தான் சூப்பர் லீகில் பங்கேற்று விளையாடும் வகையில் அவர் தனது பெயரை பதிவு செய்தார். அவரை கராச்சி கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. இந்த சீசனில் முதல் நான்கு இன்னிங்ஸில் 12, 0, 31, 3 என ரன்கள் எடுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று பெஷாவர் அணிக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் 47 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார். இது பிஎஸ்எல் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்யும் முதல் அரை சதம். 148 ரன்கள் இலக்கை கராச்சி அணி 19.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு எடுத்து வெற்றி பெற்றது.

“மற்றொரு சவாலான ஆடுகளம் இது. வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. நேர்மறையாக இருக்குமாறு அணி வீரர்களிடம் நான் கூறி இருந்தேன். எதிரணியை 150 ரன்களுக்குள் கட்டுப்படுத்துவது அவசியம் என கருதினோம். அதை எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செய்தனர். வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி” என ஆட்டத்துக்கு பிறகு வார்னர் தெரிவித்தார்.