நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி பஞ்ச்குலாவில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றம் | Neeraj Chopra Classic Javelin athlete competition Shifted to Bengaluru
புதுடெல்லி: ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு முறை பதக்கம் வென்ற நட்சத்திர வீரரான இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்போர்ட்ஸ், இந்திய தடகள கூட்டமைப்பு (ஏ.எஃப்.ஐ) மற்றும் உலக தடகள சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த போட்டியை நீரஜ் சோப்ரா தனது சொந்த மாநிலமான பஞ்ச்குலாவில் நடத்த இருந்தார்.
இந்நிலையில், அந்த மைதானத்தில் உள்ள மின்விளக்கு, உலக தடகள சம்மேளனம் நிர்ணயித்துள்ள அளவுகோல்களின் படி இல்லாததால் தற்போது போட்டியை பெங்களூருவுக்கு மாற்றி உள்ளனர். இதன்படி பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் வரும் மே 24-ம் தேதி போட்டி நடைபெறுகிறது.
இதில் நீரஜ் சோப்ராவுடன் இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள கிரனடாவின் பீட்டர்ஸ், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தோமஸ் ரோலர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீமுக்கும் போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கு உலக தடகள அமைப்பு ‘ஏ’ பிரிவு அந்தஸ்தை வழங்கியுள்ளது.
2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற கென்ய வீரர் ஜூலியஸ் யெகோ, 2015-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற அமெரிக்க வீரர் கர்டிஸ் தாம்சன், பிரேசிலின் லூயிஸ் டா சில்வா ஆகியோரும் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர்.