விராட் கோலி, தேவ்தத் படிக்கல் விளாசல்: பஞ்சாப் அணியை வீழ்த்தியது பெங்களூரு | royal challengers bengaluru beats punjab kings ipl 2025
முலான்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. பெங்களூரு அணியின் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் அரை சதம் விளாசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
பஞ்சாபின் முலான்பூரிலுள்ள மகாராஜா யதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற்றது.
முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். ஆர்யா 15 பந்துகளில் 22 ரன்கள் விளாசி கிருணல் பாண்டியா பந்துவீச்சில் டிம் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் பிரப்சிம்ரன் 17 பந்துகளில் 33 ரன்கள் (5 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்து கிருணல் பாண்டியா பந்துவீச்சில், டிம் டேவிட்டிடம் பிடிகொடுத்து வீழ்ந்தார்.
அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 10 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரொமாரியா ஷெப்பர்ட் பந்தில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஷ் 17 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். நேஹல் வதேரா 5, மார்க்கஸ் ஸ்டாயினிஸ் 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஷாங் சிங்கும், மார்கோ யான்சனும் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 157 ரன்களை எட்டியது. சஷாங் சிங் 33 பந்துகளில் 31 ரன்களும், மார்கோ யான்சன் 20 பந்துகளில் 25 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பெங்களூரு அணி தரப்பில் கிருணல் பாண்டியா, சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களும், ஷெப்பர்ட் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. பிலிப் சால்ட் 1, ரஜத் பட்டிதார் 12 ரன்கள் சேர்த்தனர். 2-வது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலியும், தேவ்தத் பட்டிக்கலும் அதிரடியாக விளையாடி சிக்ஸர், பவுண்டரிகளாக குவித்தனர்.
விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும். படிக்கல் 35 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து, ஹர்பிரீத் பிரார் பந்தில், நேஹல் வதேராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜிதேஷ் சர்மா 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதையடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி, இந்த சீசனில் தனது 5-வது வெற்றியைப் பதிவு செய்து 10 புள்ளிகளுடன் பட்டியலில் முன்னேறியுள்ளது.
பஞ்சாப் அணி, 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.
ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை 50 ரன்கள் குவித்த கோலி: இந்த ஆட்டத்தில் 73 ரன்கள் சேர்த்த விராட் கோலி, ஐபிஎல் போட்டிகளில் 67-வது முறையாக 50-க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை 50 ரன்கள் குவித்தவர் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறினார். அவருக்கு அடுத்தபடியாக டேவிட் வார்னர் (66 முறை),
ஷிகர் தவாண் (53 முறை), ரோஹித் சர்மா (45 முறை), கே.எல்.ராகுல் (43 முறை), ஏபி டிவில்லியர்ஸ்(43 முறை) ஆகியோர் உள்ளனர்.
50+ ரன்கள் சேர்த்த படிக்கல்: இந்தப் போட்டியின்போது 61 ரன்கள் குவித்த தேவ்தத் படிக்கல், கடந்த 14 ஐபிஎல் போட்டிகளில் முதல்முறையாக 50-க்கும் அதிகமாக ரன்கள் சேர்த்துள்ளார். கடைசியாக 2023-ம் ஆண்டில் தரம்சாலாவில் நடைபெற்ற போட்டியின்போது அவர் பஞ்சாப் அணிக்கெதிராக 50-க்கும் அதிகமாக ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஷ்தீப் பந்தில் 4-வது முறையாக ஆட்டமிழந்த சால்ட்: நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி வீரர் பிலிப் சால்ட், பஞ்சாபின் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் 4-வது முறையாக ஆட்டமிழந்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் இதுவரை அர்ஷ்தீப் சிங்கின் 32 பந்துகளைச் சந்தித்துள்ள பிலிப் சால்ட் 25 ரன்கள் சேர்த்து 4 முறை வீழ்ந்துள்ளார்.