EBM News Tamil
Leading News Portal in Tamil

ஹைதராபாத் கிரிக்கெட் மைதான ஸ்டாண்டிலிருந்து முகமது அசாருதீன் பெயர் நீக்கம் | Mohamed Azharuddin name removed from Hyderabad Cricket Stadium stand


ஹைதராபாத்: ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தின் ஸ்டாண்ட் ஒன்றுக்கு, வைக்கப்பட்டு இருந்த முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் உப்பல் பகுதியில் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானம் உள்ளது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்(எச்சிஏ) இதை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் இந்த மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டுக்கு விவிஎஸ் லஷ்மண் ஸ்டாண்ட் என்று இருந்ததை, 2019-ம் ஆண்டில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த அசாருதின் தலைமையிலான நிர்வாகக் குழு, ‘முகமது அசாருதீன் ஸ்டாண்ட்’ என பெயர் மாற்றம் செய்தது.

இந்நிலையில், இதை எதிர்த்து ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை நீதிபதியும், எச்சிஏ குறைகேட்பு அதிகாரியுமான வி.ஈஸ்வரய்யா விசாரித்து வந்தார்.

விசாரணையின் முடிவில், இது அதிகார துஷ்பிரயோகம் என்று கூறி, அசாருதீன் என்ற பெயரை நீக்க உத்தரவிட்டார். ஹைதராபாத் கிரிக்கெட் சங்க பொதுக் குழுவில் முடிவு எடுக்கப்படாமல் தன்னிச்சையாக அசாருதீன் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே, அந்தப் பெயர் நீக்கப்படுகிறது. மேலும், அந்த ஸ்டாண்ட், இனி விவிஎஸ் லஷ்மண் ஸ்டாண்ட் என்றே அழைக்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.