‘8-ம் வகுப்பு பயில்பவரின் ஆட்டத்தை பார்க்க விழித்தெழுந்தேன்’ – வைபவை பாராட்டிய சுந்தர் பிச்சை! | google ceo sundar pichai praises 14 year old vaibhav suryavanshi
 
நியூயார்க்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை பார்க்க தூக்கத்தில் இருந்து விழித்ததாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்திறனையும் அவர் புகழ்ந்துள்ளார். இது குறித்து பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுக வீரராக வைபவ் விளையாடினர். 14 வயதான அவர், இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிய இளவயது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். 2 ஃபோர், 3 சிக்ஸர்களை விளாசினார். ஐபிஎல் அரங்கில் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி கலக்கினார்.
“ஐபிஎல் கிரிக்கெட்டில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒருவரின் ஆட்டத்தை பார்ப்பதற்காக விழித்துள்ளேன். தரமான அறிமுகம்” என சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
181 ரன்கள் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்தனர். இருப்பினும் இந்த ஆட்டத்தில் 2 ரன்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
 
						 
			