EBM News Tamil
Leading News Portal in Tamil

கேகேஆர் அணியில் இணைந்தார் அபிஷேக் நாயர்! | abhishek nayar joined in kkr team as coaching staff


கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக உள்ள மும்பையைச் சேர்ந்த அபிஷேக் நாயர் நீக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மோசமாக விளையாடியதால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோர் விமர்சனத்துக்குள்ளாகினர்.

மேலும், பயிற்சியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அபிஷேக் நாயர் நீக்கம் குறித்து பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில் அவர், ஐபிஎல் தொடரில் கேகேஆர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளார். அவரை வரவேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

அபிஷேக் நாயர் இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் நியமிக்கப்பட்டார். 8 மாதங்களிலேயே அவர், நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி பட்டம் வென்ற போது அபிஷேக் நாயர், துணை பயிற்சியாளராகவும், ஆலோசகராவும் பணியாற்றியிருந்தார். மேலும் கேகேஆர் அகாடமியிலும் வீரர்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்து வந்தார்.