ஆவேஷ் கான் அசத்தல் பவுலிங்: லக்னோ த்ரில் வெற்றி! | RR vs LSG | Rajasthan Royals vs Lucknow Super Giants Highlights, IPL 2025
நடப்பு ஐபிஎல் சீசனின் 36-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர்.
மார்ஷ் 4 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 11 ரன்கள், கேப்டன் ரிஷப் பந்த் 3 ரன்களில் வெளியேறினர். அதன் பிறகு இம்பேக் வீரராக களம் கண்ட ஆயுஷ் பதோனி உடன் இணைந்து 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் மார்க்ரம். அது அந்த அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது. 45 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து மார்க்ரம் ஆட்டமிழந்தார். 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆயுஷ் பதோனி ஆட்டமிழந்தார்.
20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. ஆர்ச்சர், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 181 ரன்கள் தேவை என்ற இலக்குடன் பேட்டிங் இறங்கியது ராஜஸ்தான் அணி. ஓப்பனர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 74 ரன்கள் விளாசினார். இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி 34 ரன்கள் எடுத்தார். நிதிஷ் ரானா 8 ரன்கள், ரியான் பராக் 39, துருவ் ஜுரேல் 6, ஹெட்மெயர் 12, ஷுபம் டூபே 3 என 178 ரன்கள் எடுத்து போராடி தோற்றது ராஜஸ்தான் அணி. லக்னோவின் வெற்றிக்கு ஆவேஷ் கானின் பந்துவீச்சும் ஒரு காரணம். குறிப்பாக கடைசி ஓவரில் ஹெட்மயரின் விக்கெட்டை காலி செய்து, ராஜஸ்தான் எதிர்பார்த்த ரன்களை எடுக்க விடாமல் தடுத்தார்.