0, 8, 13, 17, 18, 26… ‘இந்திய கேப்டன்’ ரோஹித் சர்மா மீது வலுக்கும் விமர்சனங்கள்! | Criticism over Team India Captain Rohit Sharma form in ipl 2025
ரோஹித் சர்மாதான் இந்திய அணியின் கேப்டன். ஆனால், ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த ஆண்டு அவரது ஃபார்ம் அனைவரும் எள்ளி நகையாடும் படியாக உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அவரது ஸ்கோர் 0, 8, 13, 17, 18, 26 என்று உள்ளது. ஒரு போட்டியில் கூட பவர் ப்ளேயைத் தாண்டி அவர் நிற்கவில்லை.
இவரது டெஸ்ட் ஃபார்மை எடுத்துப் பார்த்தால் அதுவும் சந்தி சிரிக்கும்படியாகவே உள்ளது. கடைசி 10-12 இன்னிங்ஸ்களில் அவரது ஸ்கோர் 0, 8, 18, 11, 3, 6, 10, 3, 9 என்று உள்ளது. கடைசியாக நியூஸிலாந்துக்கு எதிராக 2024-ல் பெங்களூருவில் அரைசதம் கண்டார். ஒருநாள் போட்டிகளில் பரவாயில்லை ரகம், டி20 சர்வதேசப் போட்டிகளிலும் பரவாயில்லை ரகம்.
டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வரும் இவரையே இங்கிலாந்துக்கும் கேப்டனாக அனுப்புவதன் லாஜிக் என்பது பிசிசிஐ ஸ்பெஷல் லாஜிக். கவுதம் கம்பீரின் புரியாத புதிர் லாஜிக். ஆனால், ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டான ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் எதிர்கொண்ட பந்துகள் என்ணிக்கையைப் பார்த்தால் 0.4, 0.4, 5.2, 1.4, 4.6, 3.5. இப்படியாக ஆட்டமிழந்துள்ளார். அதாவது, ஐபிஎல் தொடரில் குறிப்பாக இந்தத் தொடரில் கீழ் வரிசையில் இறங்குபவர்கள் கூட அதிகப் பந்துகளை ரோஹித் சர்மாவை விட விளையாடியுள்ளனர் என்கிறது புள்ளி விவரம்.
அவர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஆடுகிறார், அதனால் எவ்வளவு ரன்கள் அடிக்கிறார் என்பது முக்கியமல்ல என்ற சப்பைக்கட்டு கூறப்பட்டு வருகிறது. ஆனால், ஒருவர் ஒரு ஓவர் கூட ஆடாமல் 4 பந்துகள் மட்டுமே ஆடுகிறார் என்றால், அவரால் என்ன தாக்கத்தை மற்ற அணியினரிடத்திலோ, அல்லது ஒரு ஆட்டத்திலோ ஏற்படுத்தி விட முடியும்?
மேலும், கீழ் வரிசையில் இறங்குபவர்களான அப்துல் சமத், பாட் கமின்ஸ், விப்ராஜ் நிகம், ஷாரூக் கான் போன்றோரின் ஸ்ட்ரைக் ரேட் 160 ஆக இருக்கும் போது பவர் ப்ளேயில் இறங்கும் ரோஹித் சர்மா, அதாவது ஹிட்மேனின் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 143 தான் என்றால் என்ன பொருள்? இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் சராசரியாக போட்டிக்கு 9.5 பந்துகளே கிரீசில் நிற்கிறார் மீதி நேரம் அவுட் ஆகி பெவிலியனில் நிற்கிறார்.
2018-ல் ஒரு இன்னிங்ஸில் சராசரியாக 15.4 பந்துகளைச் சந்தித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த 2024 சீசனில் 150 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 14 போட்டிகளில் 417 ரன்கள் என்று பங்களிப்பு நன்றாக இருந்தது. அப்படியும் மும்பை இந்தியன்ஸ் கடந்த ஆண்டு லீக் கட்டத்தில் கடைசி இடத்திலேயே இருந்தது. ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ புள்ளிவிவரங்களின் படி 2017-ஐபிஎல்க்கு பிறகே ரோஹித் சர்மா கிட்டத்தட்ட 9 இன்னிங்ஸ்களுக்கு ஒருமுறைதான் அரைசதம் எடுத்துள்ளார்.
சிஎஸ்கேவின் கலீல் அகமதுவின் சாதாரண பந்தை சாதாரணமாக மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுக்கிறார்; யாஷ் தயால் பந்தில் குச்சி பெயர்கிறது. அவர் மட்டையைக் கீழே கொண்டு வருவதும் அவர் கால் நகர்வும் எந்த ஓர் இயக்கமும் மந்தமாக இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஆந்த்ரே ரஸல் பந்தை அசிங்கமாகக் கொடியேற்றி ஆட்டமிழந்தார். கடைசியாக சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக தாழ்வான ஃபுல்டாஸை சமர்த்தாக கேட்ச் கொடுத்துச் சென்றார்.
ரோஹித் சர்மாவின் ரிஃப்ளெக்ஸ்கள் மந்தமாகி வருகின்றன. அவரை இந்திய அணியிலிருந்து தூக்குவதே மேல் என்ற பார்வைகள் இப்போது வலுத்து வருகின்றன.