‘விக்கெட் கீப்பரின் பிழையால் பவுலருக்கு அநீதி’ – வருண் சக்கரவர்த்தி விரக்தி | Injustice to bowler due to wicketkeeper s mistake Varun Chakravarthy ipl 2025
கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் கிளாஸன் செய்த பிழையால் அந்த அணியின் பந்துவீச்சாளர் ஜீஷன் வீசிய பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த டெலிவரியில் ஆட்டமிழந்த ரிக்கல்டன் அவர் அவுட்இல்லை என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அது குறித்து தனது கருத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் வருண் சக்கரவர்த்தி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் பந்துவீச்சாளருக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்துள்ளார். “பந்து வீசுவதற்கு முன்பாக விக்கெட் கீப்பரின் கிளவ் ஸ்டம்புக்கு முன்பாக வந்தால், அந்த டெலிவரியை டெட் பால் என அறிவிக்கலாம். கீப்பருக்கு எச்சரிக்கை தரலாம். அதன் மூலம் மீண்டும் அந்த பிழையை அவர் செய்ய மாட்டார். மாறாக நோ-பால் மற்றும் ஃப்ரீ-ஹிட் கொடுக்க கூடாது. இதில் பவுலர் என்ன செய்தார். இது குறித்து யோசிக்க வேண்டியது அவசியம். உங்கள் கருத்து என்ன?” என வருண் கூறியுள்ளார்.
மும்பை மற்றும் ஹைதராபாத் இடையிலான ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸின் 7-வது ஓவரை ஜீஷன் அன்சாரி வீசினார். முதல் பந்தில் சிங்கிள் எடுத்தார் மும்பையின் வில் ஜேக்ஸ். அடுத்த மூன்று பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் தடுமாறினார் ரிக்கல்டன். 5-வது பந்தில் ரன் எடுக்க முயன்று பந்தை கவர் திசையில் ஓங்கி அடித்தார். அதை கம்மின்ஸ் கேட்ச் செய்தார். அவுட் என அறிவிக்கப்பட்டது.
அப்போது மூன்றாவது நடுவர் பரிசீலனையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட்கீப்பர் கிளாஸனின் கிளவ் பந்து பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக் ஆடுவதற்கு முன்பாகவே ஸ்டம்புக்கு முன்பு வந்ததை கவனித்து நோ-பால் என அறிவித்தார். இதையடுத்து தான் வருண் இந்த கருத்தை தெரிவித்தார்.
விதி சொல்வது என்ன? – விதி எண் 27.3.1-ன் படி ஸ்ட்ரைக் எடுக்கும் பேட்ஸ்மேனுக்கு பின் நிற்கும் விக்கெட்கீப்பர், பந்து வீச்சாளர் வீசும் பந்து பேட் அல்லது பேட்ஸ்மேனை தொடும் வரையில், அல்லது ஸ்ட்ரைக்கர் எண்டில் உள்ள ஸ்டம்புகளை கடக்கும் வரையில் விக்கெட்கீப்பர் விக்கெட்டுக்கு (ஸ்டம்ப்) பின்னால் மட்டுமே இருக்க வேண்டும் என்கிறது விதி.
இதில் பந்தை பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக் செய்வதற்கு முன்பாகவே கிளாஸனின் கிளவ் ஸ்டம்புக்கு முன் பக்கம் வந்த காரணத்தால் நோ-பால் என அறிவிக்கப்பட்டது.