ஸ்குவாஷ் கால் இறுதியில் தன்வி கன்னா, அனஹத் சிங் | Squash players Tanvi Khanna, Anahat Singh in quarterfinals
ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான ஆசிய அளவிலான தகுதி சுற்று கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளி ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 134-வது இடத்தில் உள்ள இந்தியாவின் தன்வி கன்னா, போட்டித் தரவரிசையில் முதலிடமும், உலகத் தரவரிசையில் 76-வது இடமும் வகிக்கும் ஹாங் காங்கின் ஷிங் செங்குடன் மோதினார்.
இதில் தன்வி கன்னா 3-1 (11-7 11-8 8-11 12-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் 97-ம் நிலை வீராங்கனையான ஹாங் காங்கின் ஹெலன் டாங்குடன் மோதுகிறார் தன்வி கன்னா.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அனஹத் சிங் 3-0 (11-4 11-5 11-7) என்ற செட் கணக்கில் பிலிப்பைன்ஸின் ஜெமைக்கா அரிபாடோவை தோற்கடித்து கால் இறுதி சுற்றில் கால்பதித்தார். கால் இறுதி சுற்றில் ஜப்பானின் அகாரி மிடோகிகாவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார் அனஹத் சிங். தரவரிசையில் 70-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஆகான்ஷா சலுங்கே 3-0 (11-4 11-3 11-8) என்ற செட் கணக்கில் ஜப்பானின் ரிசா சுகிமோடோவை தோற்கடித்து கால் இறுதி சுற்றில் நுழைந்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ரானி, 3-0 (11-7 11-8 14-12) என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஓங் சாய் ஹங்கை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் வீர் சேட்ரானி, மலேசியாவின் முகமது சியாபிக் கமாலுடன் மோதுகிறார்.