டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளருக்கு அபராதம் | IPL 2025: Delhi Capitals bowling coach Munaf Patel fined
புதுடெல்லி: ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான முனாப் பட்டேலுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான முனாப் பட்டேல் ஐபிஎல் நடத்தை விதி 2.20-ஐ மீறி செயல்பட்டதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியின் ஊதியத்தில் இருந்து அவர், 25 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எந்த குற்றத்துக்காக முனாப் பட்டேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால், பவுண்டரி எல்லைக்கு வெளியே முனாப் படேல், போட்டி அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
களத்தில் உள்ள வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வெளியில் இருந்து வீரர் ஒருவரை முனாப் பேடல் உள்ளே அனுப்ப முயன்றார். இதற்கு போட்டி அதிகாரி அனுமதி அளிக்கவில்லை. இந்த விவகாரத்திலேயே முனாப் படேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கக்கூடும் என தெரிகிறது.