ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட ஓவர்: சந்தீப் சர்மா மோசமான சாதனை | rajasthan royals bowler sandeep sharma bowls longest over in ipl history
புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக நீண்ட ஓவர் வீசிய பவுலர்களில் ஒருவர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா. புதன்கிழமை (ஏப்.16) அன்று டெல்லி கேபிட்டல்ஸ் உடனான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் டெல்லி அணி பேட் செய்தபோது கடைசி ஓவரை ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா வீசினார். அந்த ஓவரில் மொத்தம் 11 டெலிவரிகளை அவர் வீசினார்.
நான்கு ஒய்டு (Wide), ஒரு நோ-பால், நான்கு சிங்கிள், ஒரு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸர் என மொத்தம் 19 ரன்களை அந்த ஓவரில் கொடுத்திருந்தார். இந்த ஆட்டத்தை சூப்பர் ஓவரில் வென்றிருந்தது டெல்லி அணி. ராஜஸ்தான் தோல்விக்கு ஒரு காரணமாக சந்தீப் சர்மாவின் கடைசி ஓவர் அமைந்தது. அந்த ஓவருக்கு முன்பு வரை 3 ஓவர்கள் வீசிய சந்தீப் சர்மா வெறும் 14 ரன்கள் மட்டும் தான் கொடுத்திருந்தார்.
கடைசி ஓவரில் 19 ரன்கள் கொடுத்ததன் மூலம் மொத்தமாக 4 ஓவர்களில் 33 ரன்களை தாரை வார்த்தார். வழக்கமாக டெத் ஓவர்களில் துல்லியமாக பந்து வீசும் திறன் கொண்டவர் சந்தீப் சர்மா. பந்தில் வேகத்தை குறைத்து வீசுவது வழக்கம். நேற்றைய தினம் பந்த சற்று அகலமாக வீச முயன்று தோல்விகண்டார்.
மிக நீண்ட ஓவர் வீசியவர்கள் @ ஐபிஎல்: 2023 சீசனில் மும்பை அணிக்கு எதிராக பெங்களுரு அணிக்காக விளையாடிய சிராஜ், ஒரே ஓவரில் 11 டெலிவரிகள் வீசி இருந்தார். அதே சீசனில் லக்னோ அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 11 டெலிவரிகள் வீசி இருந்தார் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய துஷார் தேஷ்பாண்டே. நடப்பு சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 11 டெலிவரிகள் வீசி இருந்தார் லக்னோ அணி ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர். தற்போது இந்தப் பட்டியலில் சந்தீப் சர்மா இணைந்துள்ளார்.