EBM News Tamil
Leading News Portal in Tamil

அசத்திய தொடக்க வீரர்கள், ஆட்டம் கண்ட நடுவரிசை, கரை சேர்த்த தோனி: தொடர் தோல்விகளுக்கு சிஎஸ்கே முற்றுப்புள்ளி | dhoni sails CSK ends back to back defeats ipl 2025


லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த லக்னோ அணியை 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 166 ரன்கள் என்ற நிலையில் சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் மட்டுப்படுத்தினர். அதிகபட்சமாக ரிஷப் பந்த் 49 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்தார்.

மிட்செல் மார்ஷ் 30, ஆயுஷ் பதோனி 22, அப்துல் சமத் 20 ரன்கள் சேர்த்தனர். நிகோலஸ் பூரன் 8 ரன்களில் வெளியேறினார். பந்து வீச்சில் சிஎஸ்கே தரப்பில் ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். விக்கெட் கைப்பற்றாவிட்டாலும் நூர் அகமது 4 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து லக்னோ அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.

167 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சிஎஸ்கே அணிக்கு அறிமுக வீரரான ஷேய்க் ரஷீத், ரச்சின் ரவீந்திரா ஜோடி அற்புதமான தொடக்கம் கொடுத்தது. இதனால் 4.2 ஓவர்களிலேயே சிஎஸ்கே 50 ரன்களளை எட்டியது. சிறப்பாக விளையாடிய ஷேய்க் ரஷீத் 19 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 27 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 22 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 8 ஓவர்களில் சிஎஸ்கே 2 விக்கெட்கள் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது. 12 ஓவர்களில் வெற்றிக்கு 93 ரன்கள் தேவையக இருந்தது.

ஆனால் அடுத்த 7 ஓவர்களில் சிஎஸ்கேவின் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் ஆட்டம் கண்டனர். ராகுல் திரிபாதி 10 பந்துகளில் 9 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 11 பந்துகளில் 7 ரன்கள் சேர்த்து ரவி பிஷ்னோய் பந்தில் நடையை கட்ட விஜய் சங்கர் 8 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த நிலையில் திக்வேஷ் ராத்தி பந்தில் வெளியேறினார். இவர்கள் கூட்டாக மொத்தம் எதிர்கொண்ட பந்துகள் 29, ஆனால் சேர்த்த ரன்கள் 25 மட்டுமே. இவர்களுடன் ஷிவம் துபேவும் தடுமாறினார். அவர், 20 பந்துகளை சேர்த்து 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 56 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி களமிறங்கினார். அவேஷ் கான் 16-வது ஓவரை வீச லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த், தோனியை பெரிய அளவிலான ஷாட்கள் மேற்கொள்ளதவாறு பீல்டிங் அமைத்தார். ஆனால் தோனி எக்ஸ்டிரா கவர், தேர்டு மேன் திசையில் இரு பவுண்டரிகளை விரட்டினார். இதனால் ரன் ரேட் நெருக்கடி பயம் தொற்றிக் கொள்ளாமல் இருந்தது. மேலும் ஷிவம் துபேவும் உந்துதல் பெற்றார். ஷர்துல் தாக்குர் வீசிய அடுத்த ஓவரில் ஷிவம் துபே பவுண்டரி அடிக்க, கடைசி பந்தில் தோனி ஒற்றை கையால் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸர் பறக்கவிட்டார்.

இதனால் தேவைப்படும் ரன் ரேட் 11-ல் இருந்து 10.33 ஆக குறைந்தது. 12 பந்துகளுக்கு 24 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷர்துல் தாக்குர் வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஷிவம் துபே, நோபாலாக வீசப்பட்ட அடுத்த பந்தில் டீப் தேர்டுமேன் திசையில் சிக்ஸர் விளாசினார். இதே ஓவரின் கடைசி பந்தில் தோனி மிட் விக்கெட் திசையில் பவுண்டரி ஒன்றை அடித்தார்.

ஷர்துல் தாக்குரின் இந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் வேட்டையாடப்பட்டது. இதனால் ஆட்டம் சிஎஸ்கேவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவேஷ் கான் வீசிய கடைசி ஓவரின் 4-வது பந்தை ஷிவம் துபே கவர் திசையில் பவுண்டரிக்கு விரட்ட சிஎஸ்கே அணி வெற்றிக் கோட்டை கடந்தது. ஷிவம் துபே 37 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்களும் தோனி 11 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 26 ரன்களும் விளாசினர்.

ஆட்ட நாயகனாக தோனி தேர்வானார். 6 வருடங்களுக்குப் பிறகு அவர், தற்போதுதான் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக வயதில் (43) ஆட்ட நாயகன் விருது வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றார். வயது மூப்பு காரணமாக தோனியால் அதிக பந்துகளை எதிர்கொண்டு தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ள முடியாது என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர், தனது மட்டையால் பதிலடி கொடுத்துள்ளார். அதுவும் மீண்டும் போட்டியை முடித்து வைக்கும் ’பினிஷராக’ உருவெடுத்துள்ளார்.

தொடக்க வீரர்கள் அமைத்துக் கொடுத்த சிறந்த அடித்தளத்தை நடுவரிசை வீரர்கள் சரியாக பயன்படுத்தாமல் அணியை நெருக்கடிக்கு கொண்டு சென்றனர். ஆனால் இறுதிக்கட்ட ஓவர்களில் தோனி தனது தாக்குதல் ஆட்டத்தால் வெற்றியை சாத்தியப்படுததினார். இந்த வெற்றியின் மூலம் நடப்பு சீசனில் தொடர்ச்சியாக அடைந்த 5 தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சிஎஸ்கே. அந்த அணி 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் தொடர்கிறது.

சுழல் ஆயுதத்தை மறந்த ரிஷப் பந்த்: ஷர்துல் தாக்குர் வீசிய 19-வது ஓவரின் 3-வது பந்தை தோனி வலுவாக எக்ஸ்டிரா கவர் திசையில் அடித்தார். அப்போது அங்கு நின்ற ரவி பிஷ்னோய், தோனி அடித்த ஷாட்டை கேட்ச் செய்யத் தவறினார். அப்போது சிஎஸ்கேவின் வெற்றிக்கு 9 பந்துகளில் 12 ரன்கள் தேவையாக இருந்தது. ஒருவேளை ரவி பிஷ்னோய் கேட்ச் செய்திருந்தால் சிஎஸ்கேவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம்.

இது ஒருபுறம் இருக்க மேலும் ரவி பிஷ்னோய் 3 ஓவர்களை வீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். தோனி, சுழற்பந்து வீச்சுக்கு எதிராக பெரிய அளவில் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ள மாட்டார். அப்படி இருக்கையில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த், ரவி பிஷ்னோய்க்கு கடைசி வரை ஓவர் வழங்கவில்லை. தோனி களமிறங்கியதில் இருந்தே எஞ்சிய 5 ஓவர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களே வீசினர். இதனால் லக்னோ அணியின் களவியூகங்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.