EBM News Tamil
Leading News Portal in Tamil

மாஸ்டர் பிளாஸ்டர் விவ் ரிச்சர்ட்ஸின் அதிவேக சதம் | மறக்க முடியுமா? | Master Blaster Viv Richard fastest century | Can you forget it?


இன்றையக் காலக்கட்டத்தில் டி20 பேட்டிங் குறுகிய கால சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிக் காலி செய்து கொண்டிருக்கிறது. ஆனால், கிரிக்கெட் உலகின் என்றென்றைக்குமான சூப்பர் ஸ்டார் ஒருவர் உண்டெனில், அது விவ் ரிச்சர்ட்ஸ்தான்.

1986-ம் ஆண்டு இன்றைய தினமான ஏப்ரல் 15-ம் தேதியன்று ஆண்டிகுவா மைதானம் ஓர் உலக சாதனையைக் கண்டது. விவ் ரிச்சர்ட்ஸ் என்னும் மேதை 56 பந்துகளில் சதம் கண்டு டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிவேக சதம் அடித்த உலகச் சாதனையை இங்கிலாந்து பந்து வீச்சை நார் நாராகக் கிழித்துத் தொங்கவிட்டு நிகழ்த்தினார்.

இது 5-வது டெஸ்ட் போட்டி, ஏற்கெனவே இங்கிலாந்து 0-4 என்று ஒயிட்வாஷ் அபாயத்தை எதிர்கொண்டிருந்த வேளையில், இந்த டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்டு 5-0 என்று விவ் ரிச்சர்ட்ஸ் தலைமையில் மே.இ.தீவுகள், இங்கிலாந்தை நொறுக்கித் தள்ளியது. அப்போது உருவாக்கிய இந்தச் சாதனை டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 ஆண்டுகள் தாக்குப் பிடித்தது. பிரெண்டன் மெக்கல்லம் ஆஸ்திரேலியாவைப் புரட்டி எடுத்து 54 பந்துகளில் சதம் கண்டு இதை உடைத்தார். மிஸ்பா உல் ஹக் 56 பந்துகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சதம் கண்டு சமன் செய்தார்.

ரிச்சர்ட்ஸ் இந்த இன்னிங்சில் 58 பந்துகளில் 7 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 110 ரன்களை எடுத்தார். ஜான் எம்பியூரே என்ற இங்கிலாந்தின் ஆஃப் ஸ்பின்னரை ஒரு கையில் அடித்த சிக்சரையும் இயன் போத்தம் பந்தை அவரது தலையையே பதம் பார்க்கும் அளவுக்கு ஹை வெலாசிட்டியில் ஒரு ஷாட்டை பிளாட்டாக சிக்ஸ் அடித்ததும் மறக்கக் கூடியதா? எல்லிசன் என்ற இங்கிலாந்து ஸ்விங் பவுலர் ஒருவர் வளைந்து ஓடி வந்து வீசுவார் அவரது பந்து வளைந்து சிக்சருக்குப் போனது.

இங்கிலாந்து பவுலிங் மோசம் என்று கூற முடியாது. இயன் போத்தம், நீல் ஃபாஸ்டர், ஜான் எம்பியூரே, எல்லிசன் ஆகியோர் டீசண்ட் பவுலர்கள்தான். ஆனால் விவ் மூடிற்கு எத்தனை பெரிய பவுலரும் எதிர்த்து நின்றதில்லை என்பது அப்போதைய பேச்சாகவே கிரிக்கெட் பொதுப்புத்தியில் பேசப்பட்டது.

இப்போது ஏதோ பாஸ்பால் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். அன்றைய தினம் விவ் ரிச்சர்ட்ஸ் ஆடிய இன்னிங்ஸினால் மே.இ.தீவுகள் 2வது இன்னிங்ஸில் 43 ஓவர்களில் 246 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. 5.72 ரன் ரேட்.

டெஸ்ட் கிரிக்கெட்டை விவ் ரிச்சர்ட்ஸ் மாற்றத்துக்கு உட்படுத்தினார். டெஸ்ட் பேட்டிங்கின் வரையறையை மாற்றினார் என்பது அந்தக் காலக்கட்டத்திய செய்தித்தாள் டைட்டிலாக இருந்தது. அப்போதைய தி கார்டியன் இதழ், ‘இங்கிலாந்து ஆடிய மிக மிக பயங்கரமான டெஸ்ட்’ என்று டைட்டில் வைத்தது.


பிற்பாடு ஏ.பி.டிவில்லியர்ஸை விவ் ரிச்சர்ட்ஸுடன் ஒப்பிட்டார்கள். ஆனால் ஒரு மேஜர் வித்தியாசம் என்னவெனில் ஹெல்மெட் அணியாமல் விவ் எதிர்கொண்ட பவுலர்களை டிவில்லியர்ஸ் எதிர்கொண்டதில்லை என்பது விவ் ரிச்சர்ட்ஸ்தான் ஆல் டைம் கிரேட் என்பதை உறுதி செய்தது.

ஆல்ஃபிரட் லார்ட் டென்னிசனின் கவிதையான ‘The Brook’-ல் வரும் உலகப் புகழ்பெற்ற வரிகளான “For men may come and men may go, But I go on forever” என்பது கிரிக்கெட்டில் விவ் ரிச்சர்ட்ஸுக்கு மட்டுமே பொருந்தும்.