EBM News Tamil
Leading News Portal in Tamil

கருண் நாயர் அதிரடி ஆச்சரியம் அளித்தது: சொல்கிறார் ஹர்திக் பாண்டியா | Karun Nair took us by surprise: Hardik Pandya IPL 2025


ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. 206 ரன்கள் இலக்கை விரட்டிய டெல்லி அணி 19 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 40 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் விளாசி மிரட்டினார். எனினும் அவரது தாக்குதல் ஆட்டத்திற்கு பலன் இல்லாமல் போனது.

மும்பை அணியின் பந்து வீச்சில் 4 ஓவர்களை வீசி 36 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளரான கரண் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வானார். மும்பை அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 4 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு முன்னேறியது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள மும்பை அணி 2 வெற்றி, 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது: நிச்சயமாக இந்த வெற்றி நிம்மதி அளிக்கிறது. வெற்றி பெறுவது எப்போதும் சிறப்பானது. குறிப்பாக இது போன்ற ஆட்டங்களில் வெற்றி என்பது சிறப்பு வாய்ந்தது. தொடர்ந்து போராட வேண்டும், இதற்கான அர்த்தம் நிறைய உள்ளது. கரண் சர்மா அற்புதமாக பந்துவீசினார். இதுபோன்ற சிறிய மைதானத்தில் அவர், பந்து வீசியவிதம் அபாரமானது.

கருண் நாயருக்கு எதிராக எப்படி, எந்த வகையில் பந்து வீசுவது என தவித்தோம். அவர், எங்கள் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட விதம், அவரது வாய்ப்புகளை எடுத்துக் கொண்ட விதம், திட்டங்களை செயல்படுத்திய விதம் ஆகியவை அவரது கடின உழைப்பைக் காட்டுகிறது. கருண் நாயர் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பீல்டிங் என்பது ஆட்டத்தை தலைகீழாக மாற்றும். இதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. கிடைத்த வாய்ப்பை நாங்கள் கைவிடவில்லை. அதை எங்களுக்கானதாக மாற்றிக் கொண்டோம். இதுபோன்ற வெற்றி எல்லாவற்றையும் மாற்றி உத்வேகத்தை கொண்டு வரும். இவ்வாறு ஹர்திக் பாண்டியா கூறினார்.