தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் சிஎஸ்கே: லக்னோ அணியுடன் இன்று பலப்பரீட்சை | CSK looking to end losing streak to play Lucknow today ipl 2025
லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட்டின் லீக் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதவுள்ளன.
லக்னோ மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் சிஎஸ்கே அணி களமிறங்கவுள்ளது.
சிஎஸ்கே அணி இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 5 தோல்விகளைச் சந்தித்து மோசமான நிலையில் உள்ளது. ஐபிஎல் தொடர்களிலேயே தொடர்ச்சியாக சிஎஸ்கே அணி 5 தோல்விகளைச் சந்தித்ததே இல்லை.
கடைசியாக சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் படுதோல்வியைக் கண்டது. வெறும் 103 ரன்களிலேயே சிஎஸ்கே அணி ஆட்டமிழந்தது. மிக மோசமான பேட்டிங்கால் அந்த அணி தோல்வி கண்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த ஆட்டத்தில் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா ஆகியோர் மிகவும் மோசமாக விளையாடி ஆட்டமிழந்தனர். விஜய் சங்கரும், ஷிவம் துபேவும் ஓரளவுக்கு நிலைத்து விளையாடி ரன்களைச் சேர்த்தனர்.
தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே ஆகியோரிடருந்து அதிரடியான இன்னிங்ஸ் இன்று வெளிப்பட்டால்தான் அந்த அணி வெற்றிப்பாதைக்குத் திரும்ப முடியும். அதேபோல் நடுவரிசையில் கேப்டன் தோனி, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா ஆகியோரிடமிருந்து சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்பட்டால் மட்டுமே அது அணியின் உத்வேகத்தை மேம்படுத்தும்.
அதேபோல் பவுலிங்கிலும் சிஎஸ்கே அணி மோசமான நிலையில் உள்ளது. சிஎஸ்கே வீரர்கள் கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரிடமிருந்து சிறப்பான பந்துவீச்சு வெளிப்பட்டால் அந்த அணிக்கு வெற்றி எளிதாகும்.
சென்னை அணிக்கு இன்னும் 8 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்த 8 ஆட்டங்களில் குறைந்தது 7-ல் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நுழைய முடியும். எனவே, இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றிக்காக கடுமையாகப் போராடும் என்று எதிர்பார்க்கலாம்.
சிஎஸ்கே அணியில் நூர் அகமது மட்டுமே இதுவரை சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவர் இதுவரை 12 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். எனவே, லக்னோவுக்கு எதிரான இந்த ஆட்டத்திலும் நூர் அகமது சிறப்பாக பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கலாம்.
அதேநேரத்தில் கடந்த 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற உற்சாகத்தில் லக்னோ அணி களமிறங்குகிறது. அந்த அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றி, 2-ல் தோல்வியைப் பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் லக்னோ அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பலம் வாய்ந்த குஜராத் அணியை அதன் சொந்த மைதானத்திலேயே வீழ்த்தியுள்ளது.
தொடக்க வீரர் எய்டன் மார்கிரம், 3-வதாக களமிறங்கும் நிகோலஸ் பூரன் ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகின்றனர். எனவே, அவர்களிடமிருந்து இன்றைய ஆட்டத்திலும் அற்புதமான இன்னிங்ஸ் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கேப்டன் ரிஷப் பந்த்தும் இன்றைய ஆட்டத்தில் அவரது அதிரடியை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பின்வரிசையில் வரும் ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஹிம்மத் சிங் ஆகியோரும் பலம் சேர்க்கின்றனர்.
பவுலிங்கில் ஷர்துல் தாக்குர், ஆகாஷ் தீப், அவேஷ் கான் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி சிஎஸ்கே அணியினருக்கு நெருக்கடி தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சுழற்பந்துவீச்சில் திக்வேஷ் ராத்தி, ரவி பிஷ்னோய் ஆகியோரிடமிருந்து மேம்பட்ட பந்துவீச்சு இன்றைய ஆட்டத்தில் வெளிப்படும் என்று தெரிகிறது.