EBM News Tamil
Leading News Portal in Tamil

சதம் விளாசிய அபிஷேக் சர்மாவின் மெசேஜும் ஸ்ரேயாஸ் ஐயரின் ரியாக்‌ஷனும் | Abhishek Sharma message after scoring century Shreyas Iyer reaction ipl 2025


ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 40 பந்துகளில் சதம் விளாசினார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா. சதம் விளாசிய கையோடு தன் வசம் இருந்த துண்டு சீட்டை எடுத்து அவர் காண்பித்தார். ‘இது ஆரஞ்சு ஆர்மிக்காக’ என அதில் எழுதப்பட்டு இருந்தது. அதை உடனடியாக வாங்கி படித்தார் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். அது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

அந்த துண்டு சீட்டை வாங்கிப் படித்ததும் ஸ்ரேயாஸ் முகத்தில் லேசான புன்னகை பூத்தது. அதுதான் நெட்டிசன்களின் கவனம் பெற்றது. 55 பந்துகளில் 141 ரன்கள் விளாசினார் 24 வயதான அபிஷேக். அவரது அதிரடியால் 246 ரன்கள் இலக்கை 18.3 ஓவர்களில் எட்டியது சன்ரைசஸ் ஹைதராபாத். ஆட்டநாயகன் விருதையும் அவர்தான் வென்றார்.

“245 ரன்கள் என்பதில் உண்மையில் நல்ல ஸ்கோர் என நான் எண்ணினேன். ஹைதராபாத் அணியினர் 2 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் இலக்கை எட்டியதை நினைத்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. நாங்கள் சில கேட்சுகளை பார்த்திருக்கலாம். ஆனால் அபிஷேக் வசம் அதிர்ஷ்டம் இருந்தது. இந்த ஆட்டத்தில் நாங்கள் எங்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பந்து வீசவில்லை. அபிஷேக் மற்றும் ஹெட் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அற்புதமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் இருந்து நாங்கள் திருத்திக் கொள்ள வேண்டியது குறித்து ஆலோசிக்க வேண்டும்” என ஆட்டத்துக்கு பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள்:

  • கிறிஸ் கெயில் – 175* ரன்கள் – 2013 சீசன்
  • பிரெண்டன் மெக்கல்லம் – 158* ரன்கள் – 2008 சீசன்
  • அபிஷேக் சர்மா – 141 ரன்கள் – 2025 சீசன்
  • குயின்டன் டி காக் – 140* ரன்கள் – 2022 சீசன்
  • ஏபி டி வில்லியர்ஸ் – 133* ரன்கள் – 2015 சீசன்