புதுமுகங்களை இறக்க வேண்டிய நேரம்: சிஎஸ்கேவுக்குத் தீர்வு சொல்லும் கிளார்க், சாவ்லா! | Time to offload the new players: Clarke, Chawla offer solutions for CSK!
 
எந்த ஐபிஎல் தொடரிலும் இல்லாத அளவுக்கு உள்ளேயும் வெளியேயும் படுதோல்வி அடைந்து வரும் சிஎஸ்கே அணி மேம்பட புதிய யோசனைகளை வழங்க பலரும் முன் வந்துள்ள நிலையில் மைக்கேல் கிளார்க் என்ன பிரச்சனை என்பதையும் பியூஷ் சாவ்லா தீர்வு என்னவென்பதையும் வழங்கியுள்ளனர்.
சிஎஸ்கே அணியினர் நம்பிக்கையில் மிகவும் தாழ்வான நிலையில் உள்ளனர். இதனால் தற்கால டி20 கிரிக்கெட் பாணியில் ஆடாமல் மரபான கிரிக்கெட் முறையில் ஆடுகின்றனர். இதனால்தான் 5 போட்டிகளில் தோற்று 2 புள்ளிகளுடன் 9ம் இடத்தில் உள்ளனர், அவர்கள் தன்னம்பிக்கை மேம்பட வேண்டும் என்று மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
ஜியோ ஹாட்ஸ்டாரில் மைக்கேல் கிளார்க் கூறும்போது, “பிட்ச் கடினமானதுதான். கொஞ்சம் ஸ்விங், கொஞ்சம் ஸ்பின் பந்துகள் திரும்புதல் என்று கடினமாகத்தான் இருந்தது. ஆனால் சென்னை அணியினர் போட்டியை அணுகும் விதம் எந்த ஒரு தீவிரத்தையும் கொண்டதாக இல்லை.
அவர்களிடத்தில் நம்பிக்கை இல்லை, தன்னம்பிக்கை மிகமிகத் தாழ்வாக உள்ளது. அவர்கள் வெற்றி பெறுவதற்காக ஆடவில்லை, தொடரில் நீடித்தால் போதும் என்றே ஆடுகின்றனர்.
இப்போதைக்கு அவர்கள் பாரம்பரிய கிரிக்கெட் அணுகுமுறையில் ஆடுகின்றனர். அதாவது ஆட்டத்தில் இருப்பதற்காக, நீடிப்பதற்காக ஆடுகின்றனர், ஆனால் வெற்றியை நோக்கி எந்த ஒரு உந்துதலும் இல்லை.
சில வேளைகளில் கிரிக்கெட்டில் வந்தது வரட்டும் என்று ரிஸ்க் எடுத்து ஆடித்தான் தீர வேண்டும், அப்படிச் செய்தால்தான் அனைத்தும் மீண்டும் திரும்பும், திருப்பம் ஏற்படும்.
நம்பிக்கை அது நல்லதோ, கெட்டதோ ஆனால் அதுதான் பெரும் தொற்று எனவே வெற்றி பெற்றால் அது அனைவரையும் தட்டி எழுப்பும். ஆனால் தோல்வி மனப்பான்மை ஊடுருவி விட்டால் அதை மாற்றுவது கடினம்” என்றார்.
விவாதத்தில் பேசிய பியூஷ் சாவ்லா, “புதிய ரத்தத்தை பாய்ச்ச வேண்டிய நேரம் இது. ஆந்த்ரே சித்தார்த் போன்ற நம்பிக்கை தரும் மிடில் ஆர்டர் பேட்டரை அணியில் எடுக்க வேண்டிய நேரம் இதுவே. திரிபாதி, ஹூடாவை நிறைய பார்த்து விட்டோம்.
புதுமுகங்களைக் கொண்டு வர இதுவே சரியான தருணம். அப்போதுதான் இழந்த தீப்பொறியை மீட்டெடுக்க முடியும். மொத்த மாற்றம் தேவையில்லை, ஒன்றிரண்டு தேவையான மாற்றங்கள் போதும் ஓய்வறையின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி விடும்.” என்றார்.