‘நடப்பு சீசனில் தொடர்ச்சியாக சிறந்த முறையில் சிஎஸ்கே விளையாடவில்லை’ – ஹஸ்ஸி | Hussey says We have not played consistently in ipl 2025 so far
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். அணியின் செயல்பாட்டை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் அணியின் தோல்வி தனக்கு மிகுந்த ஏமாற்றம் தந்துள்ளதாக சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை அன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே-வை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மந்தமான பேட்டிங் லைன்-அப் இந்த ஆட்டத்திலும் அப்பட்டமா வெளிப்பட்டது.
“ஆட்டத்தின் முடிவு மற்றும் அணியின் செயல்பாடு எனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நிச்சயமாக நாங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்கிறோம் என்பதை ஆராய்ந்து, மேம்படுவதற்கான வழியை கண்டறிய வேண்டும். எங்கள் அணியின் ஆட்ட பாணி குறித்து அதிகம் பேசப்படுகிறது. எங்கள் வீரர்களை அவர்களின் இயல்பு தன்மையில் இருந்து மாறுபட்டு ஆடுமாறு நாங்கள் சொல்வதில்லை.
மேலும், அணியில் சிறந்த வீரர்கள் உள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நாங்கள் செயல்பட வேண்டி உள்ளது. அதன் பின்னர் நிச்சயம் அவர்கள் தொடர்ந்து ரன் குவிக்க தொடங்குவார்கள், அனைத்தும் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. அணியில் ருதுராஜ் இல்லாதது பெரிய இழப்பு.
இந்த சீசனில் இதுவரை தொடர்ச்சியாக சிறந்த முறையில் நாங்கள் கிரிக்கெட் விளையாடவில்லை என்பதை ஏற்கும் முதல் நபர் நானாக இருப்பேன். அதே நேரத்தில் அணியின் பலம் மற்றும் திறனை வைத்து பார்க்கும் போது பிளே-ஆஃப் சுற்றுக்கு எங்களால் செல்ல முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார்.