பேட்ஸ்மேன்களுக்கு உதவும் வகையில் பெங்களூரு ஆடுகளம் இல்லை: தினேஷ் கார்த்திக் குற்றச்சாட்டு | Bengaluru pitch not assist to batsmen says rcb Dinesh Karthik alleges
பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள சின்னாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் 164 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 53 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 பந்துகளில், 38 ரன்கள் விளாசினார்.
பெங்களூரு அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. வெளிமைதானங்களில் 3 வெற்றிகளை குவித்த பெங்களூரு அணி சொந்த மண்ணில் 2-வது தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 2-ம் தேதி இந்த மைதானத்தில் குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்திலும் பெங்களூரு அணியால் வெற்றி பெறமுடியாமல் போனது. அந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியால் 163 ரன்களே எடுக்க முடிந்தது.
சிஸ்கேவுக்கு எதிராக சேப்பாக்கத்தில் 196 ரன்களையும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் 221 ரன்களையும் குவித்து மிரட்டியிருந்தது பெங்களூரு அணி. அதேவேளையில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஈடன்கார்டன் மைதானத்தில் 175 ரன்கள் இலக்கை 16.2 ஓவர்களை எட்டி வெற்றி கண்டிருந்தது. ஆனால் சொந்த மைதானத்தில் பெங்களூரு அணி ரன்கள் சேர்க்க தடுமாறுவது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இதற்கிடையே சின்னசாமி மைதான ஆடுகளத்தில் ரன்கள் சேர்ப்பது கடினமாக இருப்பதாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வழிகாட்டியும், பேட்டிங் பயிற்சியாளருமான தினேஷ் கார்த்திக் குற்றம்சாட்டி உள்ளர். இதுதொடர்பாக அவர், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் கூறியதாவது:
இரண்டு ஆட்டங்களிலும் நாங்கள் நல்ல பிட்ச்களைக் கேட்டோம். ஆனால், பேட்டிங் செய்வது சவாலாக இருந்தது. எனவே, எங்களுக்கு எது கிடைத்தாலும் சிறந்ததைச் செய்ய முயற்சிக்கிறோம். ஆனால் நாங்கள் நிச்சயமாக ஆடுகள வடிவமைப்பாளருடன் உரையாடுவோம். அவர் தனது வேலையை செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்
நிச்சயமாக, இது பேட்ஸ்மேன்களுக்கு அதிகம் உதவும் ஆடுகளம் அல்ல. இது ஒரு சவாலான ஆடுகளம். நாங்கள் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் அப்படித்தான் இருந்தது. டி 20 கிரிக்கெட் அதிக ரன்கள் குவிக்கப்படும் போட்டியாக இருக்கிறது. இது ஒளிபரப்பாளருக்கு சிறந்தது, ரசிகர்களுக்கும் நல்லது. அவர்கள் அனைவரும் பவுண்டரிகள், சிக்ஸ்ர்களை காண விரும்புகிறார்கள். எங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்போம்.
ஒவ்வொரு ஆடுகளத்திலும், விளையாடுவதற்கான சிறந்த வழி எது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். ஆடுகளம் எப்படி உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதும், அதற்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு விளையாடுவதும் முக்கியம். ஆனால் சில நேரங்களில் பேட்டிங்கை ரொட்டேட் செய்வது கடினமாக உள்ளது. பெரிய அளவிலான ஷாட்களை மேற்கொள்வதும் கடினமாக இருக்கிறது. எனினும் இது டி 20 கிரிக்கெட், ஒரு சில ஷாட்களை மேற்கொள்ளத்தான் வேண்டும், அப்படி விளையாடிதால் சில பேட்ஸ்மேன்களின் விக்கெட்டையும் பறிகொடுத்தோம்.
ஆடுகளத்தில் பந்துகள் நின்று வந்தன. முதல் 4 ஓவர்களுக்குப் பிறகு 13-வது ஓவரை நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம். பேட்டிங்கில் தள்ளாடினோம். ஆனால் கவுரவமான ஸ்கோரை பெறுவதற்கான வழியை கண்டுபிடித்தோம். டெல்லி அணியும் 50 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பனிப்பொழிவு இருந்தது. இதனால் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது.
ஆனால் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிக பனிப்பொழிவு இல்லை. ஆனால் துரதிருஷ்டவசமாக சிறிய அளவில் மழை பெய்தது. இதன் பின்னர் ஆடுகளத்தின் தன்மை மாறியது. அதற்கான வித்தியாசம் தெரிந்தது. டெல்லி பேட்ஸ்மேன்கள் மேற்கொண்ட ஷாட்கள் முதல் இன்னிங்ஸில் நிச்சயம் சாத்தியமில்லை. இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வழியாட்டியான ஜாகீர் கான், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்த போது லக்னோ மைதானத்தின் ஆடுகள வடிவமைப்பாளரை குற்றம் சாட்டியிருந்தார். இதேபோன்று சிஎஸ்கே அணியின் பயிற்சியளரனா ஸ்டீபன் பிளெமிங்கும், சேப்பாக்கம் ஆடுகளத்தின் தன்மை குறித்து அதிருப்தி தெரிவித்தார். இந்த வரிசையில் தற்போது பெங்களூரு அணியின் வழிகாட்டி தினேஷ் கார்த்திக்கும் இணைந்துள்ளார்.