EBM News Tamil
Leading News Portal in Tamil

‘ஆட்டத்தின் அடிப்படைகளை சரியாக செய்வது முக்கியம்!’ – சிஎஸ்கே கேப்டன் தோனி | important to do basics right way says csk captain dhoni ipl 2025


சென்னை: ஆட்டத்தின் அடிப்படைகளை சரியாக செய்வது தங்கள் அணிக்கு மிகவும் முக்கியம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஏப்.11) நடப்பு ஐபிஎல் சீசனின் 25-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச முடிவு செய்துள்ளார். இந்த நிலையில், டாஸின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி என்ன கூறினார் என்பதை பார்ப்போம்.

“எப்படியும் நாங்கள் முதலில் பேட் செய்யவே விரும்பினோம். இங்கு சில போட்டிகளில் நாங்கள் இலக்கை விரட்டிய போது விக்கெட் மந்த கதியில் இருப்பதை உணர்ந்துள்ளோம். சேஸிங் செய்யும் போது சிறப்பான அதிரடி தொடக்கம் கிடைக்கவில்லை என்றால் நிச்சயம் மிடில் ஆர்டரில் ஆடுபவர்களுக்கு அழுத்தம் அதிகரிக்கும். முழங்கை பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ருதுராஜ் இந்த சீசனில் விளையாட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார். அவரை மிஸ் செய்கிறோம். பந்தை சிறப்பாக டைம் செய்யக் கூடிய பேட்ஸ்மேன்.

நாங்கள் இந்த சீசனில் அதிக போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளோம். இரண்டு போட்டிகளை பெரிய வித்தியாசத்தில் இழந்துள்ளோம். அதனால் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியமானது. ஆட்டத்தின் அடிப்படை விஷயங்களை சரியாக செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். டாட் பால், கேட்ச்களை பிடிப்பது போன்றவை இதில் அடங்கும். பவுண்டரிகள் விளாசுவதுதான் எங்களது பேட்ஸ்மேன்களின் பலம். அதை சரியாக செய்ய வேண்டும். பேட்டிங் செய்யும் போது தொடக்கத்தில் பவுண்டரிகள் விளாசுவதும், பந்து வீசும் போது குறைந்தது 2 விக்கெட்டுகளையாவது வீழ்த்த வேண்டும்” என தோனி தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் லெவன்: ரச்சின் ரவீந்திரா, கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ஷிவம் துபே, தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஸ்வின், நூர் அகமது, அன்ஷுல் காம்போஜ், கலீல் அகமது. இமேப்கட்-சப் வீரர்கள்: பத்திரனா, ஜேமி ஓவர்டர்ன், தீபக் ஹூடா, ஷேக் ரஷீத், கமலேஷ் நாகக்கோடி.