EBM News Tamil
Leading News Portal in Tamil

30 ஐபிஎல் இன்னிங்ஸில் அதிக ரன்கள்: கெயில், வில்லியம்சனை முந்திய சாய் சுதர்சன்! | Most runs in 30 IPL innings Sai Sudharsan surpasses Gayle Williamson


அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன். இதன் மூலம் 30 ஐபிஎல் இன்னிங்ஸ் ஆடி, அதிகம் ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில், கேன் வில்லியம்சன் ஆகியோரை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

23 வயதான சாய் சுதர்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் முதல் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 30 இன்னிங்ஸ் ஆடியுள்ள அவர், 1307 ரன்களை எடுத்துள்ளார். 9 அரை சதம் மற்றும் 1 சதம் பதிவு செய்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 141.60.

புதன்கிழமை அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடனான ஆட்டத்தில் அவரது ஆட்டம் அணியின் வெற்றியை உறுதி செய்தது. இந்த ஆட்டத்துடன் சேர்த்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் 15 இன்னிங்ஸ் ஆடி, 822 ரன்கள் எடுத்துள்ளார்.

கடைசியாக இந்த மைதானத்தில் அவர் விளையாடிய 5 ஐபிஎல் இன்னிங்ஸில் தொடர்ச்சியாக 50+ ரன்களை அவர் எடுத்துள்ளார். இதன் மூலம் டிவில்லியர்ஸ் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களுருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடர்ச்சியாக 5 முறை 50+ ரன்களை டிவில்லியர்வ்ஸ் எடுத்துள்ளார்.

30 ஐபிஎல் இன்னிங்ஸ் ஆடி அதிக ரன்கள் எடுத்தவர்கள்:

  • ஷான் மார்ஷ் – 1338 ரன்கள்
  • சாய் சுதர்சன் – 1307 ரன்கள்
  • கிறிஸ் கெயில் – 1141 ரன்கள்
  • கேன் வில்லியம்சன் – 1096 ரன்கள்
  • மேத்யூ ஹேடன் – 1082 ரன்கள்