குஜராத் டைட்டன்ஸ் 58 ரன்களில் வெற்றி: ராஜஸ்தான் படுதோல்வி | GT vs RR | gujarat titans beats rajasthan royals by 58 runs in ipl 2025
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 58 ரன்களில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி வீரர்கள் பேட்டிங், பவுலிங் என சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தினர். இது அந்த அணிக்கு நடப்பு சீசனில் நான்காவது வெற்றியாக அமைந்துள்ளது.
இந்த சீசனின் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது குஜராத் டைட்டன்ஸ். அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை அடுத்தடுத்த போட்டிகளில் அந்த அணி வீழ்த்தி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. குஜராத் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் 82, பட்லர் மற்றும் ஷாருக் தலா 36 ரன்கள், தெவாத்தியா 24 ரன்கள் எடுத்தனர்.
218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் அணி விரட்டியது. சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. ஹெட்மயர் 52, சஞ்சு சாம்சன் 41 மற்றும் ரியான் பராக் 26 ரன்கள் எடுத்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 19.2 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் 58 ரன்களில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3, ரஷீத் மற்றும் சாய் கிஷோ தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சிராஜ், அர்ஷத் மற்றும் குல்வந்த் ஆகியோரும் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது குஜராத் அணி. இந்த ஆட்டத்தில் சாய் சுதர்சன் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது குஜராத்.