EBM News Tamil
Leading News Portal in Tamil

லக்னோவுக்கு மரண பயம் காட்டிய ரிங்கு சிங் – ‘த்ரில்’ போட்டியில் கொல்கத்தா போராடி தோல்வி! | IPL 2025 LSG thrill won against KKR


நடப்பு ஐபிஎல் சீசனின் 21-வது லீக் ஆட்டத்தில் கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் லக்னோ சூப்​பர் ஜெயன்ட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ் அணியின் இன்னிங்ஸை குயிண்​டன் டி காக் – சுனில் நரேன் ஜோடி ஓபன் செய்தனர். 2 சிக்ஸர்களுடன் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆகாஷ் தீப் பந்துவீச்சில் குயிண்​டன் டி காக் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து களத்துக்கு வந்தார் கொல்கத்தா கேப்டன் அஜிங்க்ய ரஹானே, சுனில் நரேன் உடன் பார்டனர்ஷிப் அமைத்து பொறுப்புடன் விளையாடினார். இந்த இணை 54 ரன்கள் சேர்த்தது.

அணியின் ஸ்கோர் 91 ஆக இருந்தபோது, 13 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் எடுத்திருந்த சுனில் நரேன், திக்வேஷ் ராத்தி பந்துவீச்சில் எய்டன் மார்க்ரத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து, கேப்டன் அஜிங்க்ய ரஹானேவுடன் வெங்கடேஷ் ஐயர் சேர்ந்து அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தார். அணியின் ஸ்கோர் 162 ஆக இருந்தபோது சிறப்பாக ஆடிவந்த ரஹானே, 35 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் நிகோலஸ் பூரனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அதைத் தொடர்ந்து வந்த, ரமண்தீப் சிங், ரகு​வன்​ஷி, சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மற்றொருபுறம் சிறப்பாக ஆடிவந்த வெங்கடேஷ் ஐயர் 29 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு களத்தில் இருந்த ஆந்த்ரே ரஸ்ஸல் உடன் ரிக்கு சிங் ஜோடி சேர்ந்தார். ஆனால், அணியின் ஸ்கோர் 185 ஆக இருந்தபோது ரஸ்ஸல் 7 ரன்களுடன் நடையைக் கட்டினார். ரிக்கு சிங்கும், ஹர்ஷித் ராணாவும் அதிரடி காட்ட, அந்த அணி 17.4 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது.

கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் வீசிய 19-வது ஓவரில் ரிக்கு சிங் ஒரு சிக்ஸர் இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட, போட்டி பரபரப்பானது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. ரவி பிஷ்னாய் வீசிய அந்த ஓவரின் மூன்று பந்துகளில் 5 ரன்களை எடுக்க, கடைசி மூன்று பந்துகளை எதிர்கொண்ட ரிங்கு சிங் இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடித்து வெற்றியின் விளிம்புக்கு கொல்கத்தா அணியை அழைத்துச் சென்றார். ரிங்கு சிங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 15 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸ்ர்களுடன் 38 ரன்கள் எடுத்திருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களை எடுத்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் ஆகாஷ் தீப், ஷர்துல் தாகூர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட் செய்த லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர்களான எய்டன் மார்க்ரம் – மிட்செல் மார்ஷ் ஜோடி கொல்கத்தா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டது. அந்த கூட்டணி 10.2 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 28 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் சிறப்பாக ஆடிவந்த மார்க்ரம் 47 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களம் கண்ட நிகோலஸ் பூரன் – மார்ஷ் ஜோடி கொல்கத்தா பந்துவீச்சில் சிக்ஸர் மழை பொழிந்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 71 ரன்கள் சேர்த்தனர்.

15.2 ஓவரில் அந்த அணி 170 ரன்கள் எடுத்திருந்தபோது, 48 பந்துகளில் 6 பவுண்டர் 5 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிகோலஸ் பூரன் 36 பந்துகளில் 7 பவுண்டரி 8 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் என்ற இலக்கை கொல்கத்தாவுக்கு நிர்ணயித்திருந்தது. கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ரானா 2 விக்கெட்டுகளையும், அந்த்ரே ரஸ்ஸல் ஒரு விக்கெட்டையும் எடுத்திருந்தார். இந்த ஆட்டத்தின் முடிவில், நிகோலஸ் பூரன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.