‘விக்கெட் விழுந்தாலும் அடியை நிறுத்தாதே’ – பாண்டியா சகோதரர்களின் ‘மேட்ச்’ எப்படி? | RCB defeated Mumbai Indians after 10 years at the Wankhede Stadium
வான்கடே மைதானத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியை ஆர்சிபி அணி திங்கள்கிழமை வீழ்த்தியது. ஆர்சிபி அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை ஹர்திக் பாண்டியா முன்னமேயே கணிக்காததால் டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். ஆர்சிபியின் அணுகுமுறை மாற்றம் என்னவெனில், ‘விக்கெட் விழுந்தாலும் அடியை நிறுத்தாதே’ என்பதுதான் அது.
கோலி, திலக் வர்மா, ஜிதேஷ் சர்மாவின் கடைசி நேர அதிரடி; படிதார், தேவ்தத் படிக்கல் என்று தனிப்பட்ட வீரர்களின் ஆட்டம் பாராட்டுதலுக்குரியது என்றாலும் இந்தப் போட்டியின் ஹைலைட் எதிரெதிரணியில் ஆடும் பாண்டியா சகோதரர்களுக்கு இடையேதான் என்றால் அது மிகையாகாது.
ஒரு கட்டத்தில் ஆர்சிபி கடைசி 33 பந்துகளில் 77 ரன்களை ஜிதேஷின் 19 பந்து 40 விளாசலால் குவித்து 221 ரன்களை எடுத்தது. இன்னொரு புறம் மும்பை இந்தியன்ஸ் 12-வது ஓவர் முடிவில் சூரியகுமார் யாதவ் (26 பந்துகளில் 28 ரன்) ஆட்டமிழக்கும் போது 99/4 என்ற நிலையிலிருந்து. 34 பந்துகளில் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஜோடி 89 ரன்களை விளாசியதும் ஆர்சிபி ரன் விகிதத்தையும் மும்பை ரன் விகிதத்தையும் ஒரு கட்டத்தில் சமன் செய்து ஆட்டத்தை சமச்சீருக்குக் கொண்டு வந்தது.
அதாவது, 8 ஓவர்களில் 123 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற அசாத்திய நிலை. கடைசியில் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியாவின் அபார அதிரடி விளாசல் மூலம் 3 ஓவர்களில் 41 ரன்கள் தேவை என்ற நிலைக்கு முன்னேறியது. அங்குதான் க்ருணால் பாண்டியாவின் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தைரியமான அந்தக் கடைசி ஓவர் ஆர்சிபி வெற்றியை உறுதி செய்தது.
மும்பை தோல்விக்கு முக்கியக் காரணம் ஹாசில்வுட், சுயாஷ் சர்மா தங்களின் முதல் 5 ஓவர்கலில் 21 ரன்களையே விட்டுக் கொடுத்ததுதான். ஹர்திக் பாண்டியா ஒரே ஓவரில் ஹாசில்வுட்டைப் போட்டு சிக்சர்கள் மழை பொழிய, 15 பந்துகளில் 42 ரன்களை விளாசினார். திலக் வர்மா 29 பந்துகளில் 56 ரன்களை குவிக்க ஆட்டம் நேருக்கு நேர் என்று ஆனது.
ஆனால், புவனேஷ்வர் குமாரும், ஹாசில்வுட்டும் 18 மற்றும் 19-வது ஓவர்களில் யார்க்கர்களைத் துல்லியமாக வீச, க்ருணால் பாண்டியா கடைசி ஓவரில் 18 ரன்களைக் கொடுக்காமல் ஆர்சிபியைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
ஹாசில்வுட்டை 2 அபாரமான சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் மற்றும் க்ருணால் பாண்டியாவை 2 சிக்சர்கள் என்று ஹர்திக் பாண்டியா வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார். இடையே க்ருணால், ஹர்திக் பாண்டியாவை ஏதோ கலாய்த்தார், ஹர்திக் பாண்டியாவும் சிரித்தபடியே சென்றார். ஆனால், கடைசியில் க்ருணால் பாண்டியா வெற்றிப் புன்னகை புரிய, ஹர்திக் பாண்டியா ஹாசில்வுட்டின் லெக் ஸ்டம்ப் பந்தை தூக்கி அடிக்கப் போய் கேட்ச் ஆக, மும்பையின் வெற்றி வாய்ப்பு 75% குறைந்து போனது.
கடைசி ஓவரில் மிட்செல் சாண்ட்னர், தீபக் சஹார், நமன் தீர் விக்கெட்டுகளை க்ருணால் வீழ்த்த 209/9 என்று மும்பை தன் 4வது தோல்வியைச் சந்தித்து ஏமாற்றமடைந்தது. ஆட்டம் முடிந்தவுடன் க்ருணால் பாண்டியா கூறுகையில், ‘என் சகோதரர் ஹர்திக்கும் வெற்றி பெற ஆடினார், நாங்களும் வெற்றி பெறவே ஆடினோம், நாங்கள் வென்றோம். ஹர்திக் பாண்டியாவுக்காக வருந்துகிறேன்’ என்றார்.