EBM News Tamil
Leading News Portal in Tamil

கோலி, ரஜத், ஜிதேஷ் அபாரம்: மும்பை இந்தியன்ஸுக்கு 222 ரன்கள் இலக்கு | MI vs RCB | kohli rajat jitesh knock helps rcb to score 221 runs versus mumbai ipl 2025


மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. இதில் முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 221 ரன்களை குவித்தது.

மும்பை – வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பந்து வீச முடிவு செய்தார். அந்த அணிக்காக மீண்டும் பும்ரா விளையாடுகிறார். இதுதான் இந்த சீசனில் அவரது முதல் ஆட்டம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். போல்ட் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் பவுண்டரி விளாசி, அடுத்த பந்தில் போல்ட் ஆனார். தொடர்ந்து தேவ்தத் படிக்கல் களத்துக்கு வந்தார். கோலி உடன் இணைந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசிய அவர், பெரிய ஷாட் ஆட முயன்று ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை விக்னேஷ் புதூர் வீழ்த்தினார்.

மறுமுனையில் கோலி அதிரடியாக ஆடினார். 42 பந்துகளில் 67 ரன்கள் விளாசி அசத்தினார். 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களை அவர் விளாசினார். அவரது விக்கெட்டை 15-வது ஓவரில் கைப்பற்றினார் ஹர்திக் பாண்டியா. அதே ஓவரில் லிவிங்ஸ்டன் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

இருப்பினும் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், 25 பந்துகளில் அரை சதம் விளாசினார். மறுமுனையில் ஜிதேஷ் சர்மா அதிரடியாக ஆடினார். ரஜத் பட்டிதார், 32 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். போல்ட் வீசிய பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்றார் ரஜத் பட்டிதார், அதை அபாரமாக கேட்ச் பிடித்தார் மும்பை விக்கெட் கீப்பர் ரிக்கல்டன். ஜிதேஷ், 18 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 222 ரன்கள் தேவை.

டி20 கிரிக்கெட்டில் 13,000+ ரன்கள் குவித்த கோலி: டி20 கிரிக்கெட்டில் 13,000+ ரன்களை குவித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார் கோலி. மும்பை இந்தியன்ஸ் உடனான இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.