EBM News Tamil
Leading News Portal in Tamil

“எங்களது செயல்பாடு ஏமாற்றம் தருகிறது” – ஹைதராபாத் பயிற்சியாளர் வெட்டோரி | obviously our performance disappointing says srh coach vettori ipl 2025


ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்த நிலையில், தங்கள் செயல்பாடு ஏமாற்றம் அளிப்பதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறியுள்ளார்.

நடப்பு சீசனில் 300 ரன்களை ஏதேனும் ஒரு அணிக்கு குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பார்க்கப்பட்டது. ஏனெனில், அந்த அணியின் பேட்டிங் அணுகுமுறை அப்படி இருந்தது. இந்த சீசனின் முதல் போட்டியில் 286 ரன்களை எடுத்தது. இருப்பினும் அதற்கு அடுத்த நான்கு போட்டிகளில் 200 ரன்களை கூட அந்த அணியால் எட்ட முடியவில்லை.

அணியின் பேட்டிங் மொத்தமாக சரிந்துவிட்டது. நடப்பு சீசனில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகளில் ஒன்றாக ஹைதராபாத் பார்க்கப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்களின் டாப் 4 அணிகளில் ஒன்றாக ஹைதராபாத் இருந்தது. இந்த நிலையில்தான் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது.

“அனைத்து ஐபிஎல் அணிகளும் தோல்வி எனும் கட்டத்தை கடந்து வரும். அதற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மட்டும் விதிவிலக்கல்ல. இருப்பினும் இங்கிருந்து நாங்கள் முன்னேற வேண்டும். அதற்கான பணியை செய்தாக வேண்டும். எங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், எங்களது செயல்பாடு ஏமாற்றம் தருகிறது.

நாங்கள் அணியாக இணைந்து எங்கள் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும். கடந்த நான்கு போட்டிகளில் வெற்றிக் கோட்டினை நாங்கள் நெருங்க கூட இல்லை. இப்போது எங்கள் சவால் அதுதான். இங்கிருந்து நாங்கள் முன்னேற வேண்டி உள்ளது” என வெட்டோரி கூறியுள்ளார்.