“அதை நான் முடிவு செய்யவில்லை; உடல் தான்…” – ஓய்வு குறித்து தோனி டாக் | its not me who is deciding csk dhoni about retirement ipl 2025
சென்னை: ஓய்வு குறித்து தான் முடிவு செய்யவில்லை என்றும், அதை தனது உடல்தான் முடிவு செய்கிறது என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பலரும் தோனி ஓய்வு பெற வேண்டுமென சொல்லி வருகின்றனர். இதில் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள், ரசிகர்கள் அடங்குவர்.
அதே நேரத்தில் அனுபவ வீரர் அணியில் இருப்பது அவசியம் என்றும், விக்கெட் கீப்பிங்கில் சிறப்பான பங்களிப்பு தருகிறார் என்றும், தோல்விக்கு தோனி ஒருவர் மட்டுமே காரணம் அல்ல என்றும் தோனி அன்பர்கள் சொல்லி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை (ஏப்.5) டெல்லி கேப்பிடல்ஸ் உடனான ஆட்டம் தான் தோனியின் கடைசி போட்டி என்ற தவறான தகவல் பரவியது. தோனியின் பெற்றோர், சகோதரி, மனைவி, மகள் என அனைவரும் போட்டியை காண வந்திருந்தனர். இந்த நிலையில் தோனி ஓய்வு பெறவில்லை என சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் கூறியிருந்தார். அது குறித்து இப்போதெல்லாம் அவரிடம் கேட்பது கூட இல்லை, ஏனெனில் அவர் வலுவாக ஆடி வருகிறார் என பிளெமிங் சொல்லி இருந்தார்.
இந்த நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் தோனி பங்கேற்றுள்ளார். அதில் ஓய்வு குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. “இப்போது நான் ஓய்வு பெறவில்லை. நான் ஐபிஎல் விளையாடுகிறேன். எனது திட்டங்கள் மிகவும் எளிமையாக இருக்கும். வருடத்துக்கு ஒரு முறை மட்டும்தான் அதை தீர்மானிப்பேன். இப்போது எனக்கு 43 வயது ஆகிறது. இந்த சீசன் முடிந்த பிறகு ஜூலை மாதம் வந்தால் 44 வயதை எட்டுவேன்.
அதன் பிறகு விளையாடுவதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்ய எனக்கு எப்படியும் 10 மாதங்கள் இருக்கும். ஆனால், அதை நான் முடிவு செய்வதில்லை. எனது உடல் தான் முடிவு செய்கிறது. நம்மால் முடியும் அல்லது முடியாது என்று உடல்தான் சொல்லும். என்னவென்று அப்போது பாக்கலாம்.” என தோனி அதில் தெரிவித்துள்ளதாக தகவல்.