EBM News Tamil
Leading News Portal in Tamil

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் சொதப்பல்: ஹாட்ரிக் வெற்றி பெற்றது டெல்லி | delhi capitals defeated chennai super kings in chepauk ipl 2025


சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 6 விக்கெட்கள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரரான பிரேசர் மெக்கர்க் ரன் ஏதும் எடுக்காமல் கலீல் அகமது வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய அபிஷேக் போரெல், முகேஷ் சவுத்ரி வீசிய 2-வது ஓவரில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசினார்.

இந்த ஓவரில் 19 ரன்கள் குவிக்கப்பட்டன. கலீல் அகமது வீசிய 5-வது ஓவரில் கே.எல்.ராகுல் சிக்ஸர் விளாசினார். பவர்பிளேவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் சேர்த்தது. அபிஷேக் போரெல் 20 பந்துகளில், ஒரு சிக்ஸர். 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா வீசிய பந்தில் ஷார்ட் தேர்டு திசையில் நின்ற மதீஷா பதிரனாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து களமிறங்கிய அக்சர் படேல் 14 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் நூர் அகமது பந்தில் போல்டானார். இதன் பின்னர் சமீர் ரிஸ்வி களமிறங்க டெல்லி அணி 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. சீராக விளையாடிய தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 33 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். இது. அவரது 38-வது அரை சதமாக அமைந்தது. கலீல் அகமது. நூர் அகமது. ஜடேஜா ஆகியோரது பந்துகளில் கே.எல்.ராகுல் சிக்ஸர் விளாசி அசத்தினார்.

சமீர் ரிஸ்வி 15 பந்துகளில், 20 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்தில் நடையை கட்டினார். சிறப்பாக பேட் செய்து வந்த கே.எல்.ராகுல் 51 பந்துகளில், 3 சிக்ஸர்கள். 6 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் விளாசிய நிலையில் பதிரனா வீசிய பவுன்சர் பந்தை விளாச முயன்ற போது தோனியிடம் கேட்ச் ஆனது. இதைத் தொடர்ந்து அஷுதோஷ் சர்மா ஒரு ரன் எடுத்த நிலையில் ஜடேஜாவின் விரைவான த்ரோ மற்றும் தோனியின் மின்னல் வேகத்தால் ரன் அவுட் செய்யப்பட்டார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 12 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களும், விப்ராஜ் நிகாம் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

184 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சிஎஸ்கே பவர்பிளேவில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ரச்சின் ரவீந்திரா 3 ரன்களில் முகேஷ் குமார் வீசிய பந்தில் அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களில் மிட்செல் ஸ்டார்க் விரித்த வலையில் சிக்கினார். 141 கிலோமீட்டர் வேகத்தில் பேக் ஆஃப் லென்ந்தில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தை ருதுராஜ் கெய்க்வாட் டீப் ஸ்கொயர் லெக் திசையில் விளாசிய போது பிரேசர் மெக்கர்க்கிடம் கேட்ச் ஆனது. இதைத் தொடர்ந்து டேவன் கான்வே 13 ரன்களில் விப்ராஜ் நிகாமின் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

5.3 ஓவர்களில் 41 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த சிஎஸ்கே அணி அதன் பின்னர் மீள முடியாமல் போனது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே 18 ரன்னில் விப்ராஜ் நிகாம் பந்திலும், ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் குல்தீப் யாதவ் பந்திலும் பெவிலியன் திரும்பினர். 10.4 ஓவர்களில் 74 ரன்களுக்கு 5 விக்கெட் களை பறிகொடுத்த நிலையில் விஜய் சங்கருடன் இணைந்த தோனி தோல்வி அடையும் ரன்களின் வித்தியாசத்தை குறைக்க போராடினார். 2 முறை ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்த விஜய் சங்கர் 54 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளு டன் 69 ரன்களும், தோனி 26 பந்துகளில், ஒரு சிக்ஸர். ஒரு பவுண்டரியுடன் 30 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருக்க 20 ஓவர்களின் முடிவில் சிஎஸ்கே 5 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

இதனால் டெல்லி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. அதேவேளையில் சிஎஸ்கே அணி ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்தது. பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் விப்ராஜ் நிகாம் 2 விக்கெட்களை வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக கே.எஸ்.ராகுல் தேர்வானார்.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது (பஞ்சாப் – ராஜஸ்தான் போட்டிக்கு முன்னதாக). சிஎஸ்கே அணி 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.

அஸ்வினுக்கு விக்கெட் இல்லை: கடைசி 5 ஓவர்களில் டெல்லி அணி 45 ரன்கள் சேர்த்தது. பந்துவீச்சில் சிஎஸ்கே தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஜடேஜா, நூர் அகமது, பதிரனா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். அஸ்வின் 3 ஓவர்களை வீசி 21 ரன்களை வழங்கிய நிலையில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி: ஆட்ட நாயகன் விருது பெற்ற கே.எல். ராகுல் கூறும்போது, “ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாக தொடக்க வீரராக விளையாடவே தயாராகிக் கொண்டிருந்தேன்.

ஆனால், பயிற்சியாளரிடம் நான் பேசியபோது அவர், என்னை 4-வது இடத்தில் களமிறக்க விரும்புவதாக கூறினார். ஏனெனில் அந்த இடத்துக்கு விளையாட வேண்டிய வீரர் வரவில்லை. இந்த ஆட்டத்தில் டாப் ஆர்டரில் களமிறங்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

அன்று ஆர்சிபி இன்று டெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோற்கடித்திருந்தது. அந்த அணி 18 வருடங்களுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வென்றிருந்தது. இதேபோன்று தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2010-ம் ஆண்டுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை தோற்கடித்துள்ளது.

கலீலும் முதல் ஓவரும்: டெல்லி அணிக்கு எதிராக நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கேவின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது முதல் ஓவரிலேயே பிரேசர் மெக்கர்க்கை ஆட்டமிழக்கச் செய்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் அவர், முதல் ஒவரில் விக்கெட் கைப்பற்றுவது இது 3-வது முறையாகும். மும்பை அணிக்கு எதிராக ரோஹித் சர்மா, ராஜஸ்தான் அணிக்கு எதிராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரையும் முதல் ஓவரிலேயே வெளியேற்றியிருந்தார் கலீல் அகமது.