ஓய்வை அறிவிக்கிறாரா தோனி! – சிஎஸ்கே பயிற்சியாளர் சொல்வது என்ன? | MS Dhoni Retirement Speculation: Chennai Super Kings Coach Breaks Silence IPL 2025
மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வரும் சூழலில் அதுகுறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங் விளக்கமளித்துள்ளார்.
சனிக்கிழமை (ஏப்.5) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது சிஎஸ்கே. இதற்கு முன்னதாக பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுடன் தோல்வியை தழுவி இருந்தது. இந்த போட்டியை காண தோனியின் பெற்றோர் பான் சிங் மற்றும் தேவிகா தேவி இருவரும் சேப்பாக்கம் மைதானம் வந்திருந்தனர்.
2008ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக தோனி ஆடத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து அவரது பெற்றோர் போட்டியை காண வந்தது இதுவே முதல்முறை. இதனால் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவிக்க உள்ளார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவத் தொடங்கியது.
இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே தோனியின் ஓய்வு குறித்த தகவல்கள் வெளியானாலும், முதல் போட்டிக்காக சென்னை வந்தபோது தோனியின் டிசர்ட்டில் இடம்பெற்ற ‘ஒன் லாஸ்ட் டைம்’ மோர்ஸ் குறியீடு, தற்போது தோனியின் பெற்றோர் போட்டியை காண வந்திருப்பது போன்றவை இதனை உறுதி செய்வதாக உள்ளது.
இந்த நிலையில், தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங்கிடம் கேட்கப்பட்டபோது, “அவர் இன்னும் வலிமையாகவே இருக்கிறார். இப்போதெல்லாம் நான் அவரிடம் எதிர்காலம் குறித்து கேட்பது கூட இல்லை” என்று தெரிவித்தார்.