EBM News Tamil
Leading News Portal in Tamil

ருதுராஜ் காயம்: தோனி கேப்டன்? | ruturaj injury leads dhoni to captain csk ipl 2025


ஐபிஎல் தொடரில் கடந்த 30-ம் தேதி குவாஹாட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர், சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஆட்டத்தில் களமிறங்குவாரா? என்பது சந்தேகமாகி உள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறும்போது, “டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்குவது என்பது அவர், காயத்தில் இருந்து மீண்டு வருவதை பொறுத்தே இருக்கும். அவருக்கு இன்னும் வலி இருக்கிறது. வலை பயிற்சியில் அவர், எவ்வாறு பேட்டிங் செய்கிறார் என்பதை பொறுத்து முடிவு செய்வோம். அவர் விளையாடவில்லை என்றால், அணியை யார் வழிநடத்துவார்கள் என்று உறுதியாக தெரியவில்லை.

உண்மையில் நான் அதைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும், ருதுராஜ் கெய்க்வாட்டும் இதைப் பற்றி சிந்தித்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் எங்களிடம் ஒரு இளைஞர் உள்ளார். அவர், ஸ்டெம்புகளுக்கு பின்னால் இருக்கிறார். ஒருவேளை அவர், அந்த வேலையை செய்ய முடியும். அவருக்கு இந்த பணியில் அனுபவம் உள்ளது, எனவே அவர் அதைச் செய்யலாம். ஆனால் கேப்டனாக யார்? இருப்பார்கள் என எனக்கு சரியாகத் தெரியவில்லை” என்றார்.

மைக்கேல் ஹஸ்ஸி ஸ்டெம்புகளுக்கு பின்னால் இளம் வீரர் இருக்கிறார் என்று மறைமுகமாக தோனியை குறிப்பிட்டதாகவே கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன. தோனி 2024-ம் ஆண்டு சீசனில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் ருதுராஜ் கெய்க்வாட் முழுமையாக அணியை வழிநடத்தினார். முன்னதாக 2022-ம் ஆண்டு சீசனில் ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் தொடர்ச்சியான தோல்விகளால் அந்தத் தொடரின் நடுவிலேயே தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார்.