மார்ஷ் அதிரடி பேட்டிங், ஹர்திக் 5 விக்கெட் – மும்பைக்கு 204 ரன்கள் இலக்கு | LSG vs MI | lsg opener marsh knocks mumbai indians bowlers ipl 2025 hardik 5 wikcets
லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் உடனான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 203 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
லக்னோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. லக்னோ அணிக்காக மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இதில் மார்ஷ் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 31 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 9 பவுண்டரி மாற்று 2 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.
தொடர்ந்து பேட் செய்ய வந்த பூரன் 12 ரன்களிலும், ரிஷப் பந்த் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த படோனி, 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். 4 பவுண்டரிகளை அவர் விளாசினார். மறுமுனையில் ஆடிய மார்க்ரம், இந்த சீசனில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சமத் 4 ரன்களில் வெளியேறினார். டேவிட் மில்லர், 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப், ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்களை எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹர்திக் 5 விக்கெட் கைப்பற்றினார். விக்னேஷ் புதூர், அஸ்வனி குமார், போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற மும்பைக்கு 204 ரன்கள் தேவை.