EBM News Tamil
Leading News Portal in Tamil

‘என்னையா அணிக்கு தேர்வு செய்யவில்லை?’ – ஆர்சிபி அணிக்கு எதிராக அசத்திய சிராஜ் | Siraj outstanding bowling performance against RCB ipl 2025


பெங்களூரு: ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்காக கடந்த 7 வருடங்களாக விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை, அந்த அணி நிர்வாகம் இம்முறை கழற்றிவிட்டிருந்தது. இதனால் அவர், நடப்பு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றுமுன்தினம் ஆர்சிபி அணிக்கு எதிராக அதிலும் பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் முகமது சிராஜ் அற்புதமாக பந்து வீசி அசத்தினார்.

4 ஓவர்களை வீசிய அவர், 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அபாயகரமான வீரர் பில் சால்ட் (14), தேவ்தத் படிக்கல் (4), லியாம் லிவிங்ஸ்டன் (54) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். சிராஜின் பந்து வீச்சால் பெங்களூரு அணி 169 ரன்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் இலக்கை துரத்திய குஜராத் அணி 13 பந்துகளை மீதம் வைத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய முகமது சிராஜ் ஆட்ட நாயகனாக தேர்வானார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான சேவக் கூறும்போது, “ முகமது சிராஜிடம் நெருப்பு இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறாதது குறித்து அவர், வருத்தப்படுகிறார் என்று நான் எங்கோ உணர்கிறேன், அந்த நெருப்பை நான் பார்த்தேன். ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளரிடம் இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

“நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்கலையா? இப்போது காட்டுகிறேன்” என்ற தோரணையில் சிராஜ் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் இதே தீவிரத்துடன் தொடர்ந்து விளையாடி இந்திய அணிக்கு திரும்புவார் என்று நம்புகிறேன். சின்னசாமி ஆடுகளத்தில் புதிய பந்தில் தனது சாதனையை முகமது சிராஜ் பராமரித்தார். முதல் 3 ஓவர்களில் 12 அல்லது 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். நான்காவது ஓவரை அவர் தொடர்ச்சியாக வீசியிருந்தால் மேலும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கலாம். அவர் புதிய பந்தை ஸ்விங் செய்தார், ஆடுகளத்தில் இருந்தும் அவருக்கு உதவி கிடைத்தது” என்றார்.