சென்னை: ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) நடப்பு சீசனில் அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்க தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்திய நிலையில் அதன் பின்னர் தொடர்ச்சியாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது.
தொடக்க பேட்டிங்கில் ஆக்ரோஷம் இல்லாதது, நடுவரிசை பலவீனம், கைகொடுக்காத பின்வரிசை பேட்டிங் மற்றும் தாக்கம் ஏற்படுத்தாத பந்து வீச்சு துறை என ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த 17 வயதான பேட்ஸ்மேனான ஆயுஷ் மாத்ரேவுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது திறனை பரிசோதித்து பார்ப்பதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நவம்பரில் நடைபெற்ற மெகா ஏலத்தில் மாத்ரேவை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. ஆயுஷ் மாத்ரே, ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக 8 ஆட்டங்களில் விளையாடி 2 சதங்களுடன் 471 ரன்கள் எடுத்திருந்தார். கடந்த ஜனவரியில் விஜய் ஹசாரே டிராபியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக சதம் விளாசி மும்பை அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்திருந்தார்.
அந்தத் தொடரில் 7 ஆட்டங்களில் விளையாடி 65.42 சராசரியுடன் 458 ரன்கள் குவித்திருந்தார். எனினும் மும்பை அல்லது எந்த அணிக்காகவும் ஆயுஷ் மாத்ரே இதுவரை டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை, இந்நிலையில்தான் அவர், சிஎஸ்கே நிர்வாகத்தையும், திறமை கண்டறியும் குழுவையும் கவர்ந்துள்ளார். சிஎஸ்கேவின் வலை பயிற்சியில் ஆயுஷ் மாத்ரே விரைவில் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.