‘25 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம்’ – ரிஷப் பந்த் | we were 25 runs short says lsg captain rishabh pant
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 25 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம் என்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், லக்னோ அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டம் நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரியன்ஷ் ஆர்யா 8, பிரப்சிம்ரன் சிங் 69, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 52, நேஹல் வதேரா 43 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். லக்னோ அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்விகளைப் பெற்றுள்ளது. தோல்வி குறித்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறியதாவது:
இந்த லீக் ஆட்டத்தில் நாங்கள் எடுத்த ஸ்கோர் போதுமானதாக இல்லை. முதலில் பேட்டிங் செய்த நாங்கள் 20 முதல் 25 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம் என்று நினைக்கிறேன். எங்களுடைய சொந்த மைதானத்தில் தோல்வி கண்டது வருத்தம் அளிக்கிறது. உள்ளூர் ஆடுகளத்தின் தன்மையை நாங்கள் மதிப்பீடு செய்து வருகிறோம்.
தொடக்கத்தில் விக்கெட்களை விரைவாக இழக்கும்போது பெரிய அளவிலான ஸ்கோர் எடுப்பது சிரமமான விஷயம்தான். ஆனால் எங்கள் அணியின் ஒவ்வொரு வீரரும் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முயன்றனர். ஆனால், துரதிருஷ்டவசமாக ஆட்டத்தை வெல்ல முடியவில்லை. இந்த ஆட்டத்தில் இருந்து நாங்கள் நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்டோம். இனி வரவிருக்கும் ஆட்டங்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி முன்னேற விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.