EBM News Tamil
Leading News Portal in Tamil

குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி: ஆர்சிபி-க்கு முதல் தோல்வி | IPL 2025 | gujarat titans beats rcb in bengaluru ipl 2025


பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 14-லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. நடப்பு சீசனில் ஆர்சிபி அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. டாஸை இழந்த ஆர்சிபி முதலில் பேட் செய்தது. பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். 7 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார். தொடர்ந்து தேவ்தத் படிக்கல் மற்றும் பில் சால்ட் ஆகியோர் ஆட்டமிழந்தனர். பவர் பிளே ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் சிராஜ் அற்புதமாக பந்து வீசி இருந்தார். அவரது முதல் மூன்று ஓவர்களில் 2 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜிதேஷ் சர்மா மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் இணைந்து 52 ரன்கள் கூட்டணி அமைத்தனர். ஜிதேஷ், 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். லிவிங்ஸ்டன் 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தார். டிம் டேவிட், 18 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

170 ரன்கள் என்ற இலக்கை குஜராத் டைட்டன்ஸ் அணி விரட்டியது. குஜராத் கேப்டன் கில் 14 ரன்களில் வெளியேறினார். பின்னர் சாய் சுதர்சன் மற்றும் பட்லர் இணைந்து 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 36 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பட்லர், 39 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். ரூதர்போர்ட், 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து குஜராத் வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் அந்த அணியின் இரண்டாவது வெற்றியாக இது அமைந்துள்ளது.