EBM News Tamil
Leading News Portal in Tamil

“ஏம்ப்பா உடம்பை இப்படி ஆட்டுற..?” – திரிபாதியை கலாய்த்த ஹர்பஜன் | harbhajan singh mocks csk player rahul tripathi ipl 2025


பந்து வருவதற்கு முன்பு ஒவ்வொரு பேட்டருக்கும் ஒவ்வொரு விதமான ‘ட்ரிக்கர் மூவ்மெண்ட்’ இருக்கும். கவாஸ்கர் லேசாக நகர்வார், ஸ்டீவ் ஸ்மித் ஓடி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேவே வந்து விடுவார். ஒரு சிலர்தான் நேராகத் தலையை வைத்துக் கொண்டு அப்படியே நின்று ஆடுவார்கள். சிஎஸ்கே அணி வீரர் ராகுல் திரிபாதி உடம்பை ஆட்டுகிறார். அது இப்போது தேவையற்ற கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வருகின்றது.

வர்ணனையாளர் ஸ்ரீகாந்த் அதை அப்படியே நடித்துக் காட்டி கேலி செய்து நெட்டிசன்களின் சாபத்திற்கும் வசைக்கும் ஆளானார். இப்போது ஹர்பஜன் சிங், திரிபாதி லெவனிலேயே இருக்கக் கூடாது என்ற கருத்தை அவிழ்த்து விட்டுள்ளார். ராகுல் திரிபாதி 96 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் 93 அதிகபட்ச தனிப்பட்ட ரன்களுடன் 139 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் 2,266 ரன்கள் எடுத்துள்ளார். 12 அரைசதங்கள், 85 சிக்ஸர்கள், 227 பவுண்டரிகள் என்பது ஓரளவுக்கு நல்ல ரன் எண்ணிக்கைதான்.

ஆனால், மேட்சுக்கு மேட்ச் சொதப்பித் தள்ளும், அதுவும் கடந்த 2-3 ஐபிஎல் போட்டிகளாகவே சொதப்பி வரும் தோனியை ஒன்றுமே விமர்சிக்காமல் அவருக்கு பி.ஆர் வேலையைச் செய்து வரும் ஒளிபரப்பு நிறுவனத்தின் அங்கத்தினர்களாக தமிழ் வர்ணனை டீம் உள்ளதை பலரும் குறிப்பிட்டு விமர்சித்தே வருகின்றனர்.

இதற்கு முன்னரும் பாவம்! கேதர் ஜாதவை அனைவரும் கடுமையாகக் கிண்டலடித்ததும் அருவருப்பாக இருந்தது. இப்போது ராகுல் திரிபாதி மாட்டிக் கொண்டு விட்டார். இப்படியே போனால் சிஎஸ்கேவுக்கு விளையாட இளம் வீரர்கள் உட்பட அனைவரும் தயங்கி வரவே மாட்டார்கள். அந்த அளவுக்கு ஒரு மகோன்னதமான கிரிக்கெட்டை ஆடும் அணியும் அல்ல சிஎஸ்கே என்பதுதான் இதில் நகை முரண். சிஎஸ்கே ரசிகர்களும் அந்த அணிக்கு துதிபாடும் வர்ணனையாளர்களும் முன்னாள்களும் சிஎஸ்கேவை ஏதோ ஆஸ்திரேலியா போலும், முன்னாளைய மே.இ.தீவுகள் போலும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றே தெரிகிறது. நாம் விஷயத்திற்குத் திரும்புவோம்.

ஒரு பேட்டரின் டிரிக்கர் மூவ்மெண்ட்டையெல்லாம் கேலி செய்வது கிரிக்கெட் வர்ணனை, பத்தி எழுத்து என்ற வெளிப்பாட்டு நிலைகளின் நாகரிகத்திற்கு உகந்ததல்ல. இப்போது ஹர்பஜன் சிங் ராகுல் திரிபாதியை இவ்வகையில் கேலி செய்துள்ளார். இவையெல்லாமே இப்போது பெரிய அநாகரிகமாகப் பார்க்கப்படும் ‘Body Shaming’ விவகாரம்தான்.

“சென்னை அடுத்தடுத்து தோற்றுள்ளது. அவர்கள் அதிகமாகத் தவறுகளை இழைக்கின்றனர். முதலில் ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக ஆடுவது. அவர் உடம்பைத்தான் ஆட்டுகிறாரே தவிர ரன் எடுப்பதில்லை. மன்னிக்கவும், திரிபாதி நல்ல பிளேயர், கடினமாக உழைப்பவர், ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர் பிளெயிங் லெவனிலேயே இருக்கக் கூடாது.

உடம்பைப் போட்டு இப்படி ஆட்டினால் பந்தை எப்போது அவர் பார்க்க முடியும்? ரன்களும் வரவில்லை, அவரிடம் அவ்வளவு தீவிரமும் தெரியவில்லை. நல்ல தொடக்க வீரர்களை எப்போதுமே கொண்ட அணி சிஎஸ்கே. ஹெய்டன், மெக்கல்லம், டெவன் கான்வே உள்ளிட்டோர் ஆடும் இடம். கான்வே அணியில் இருக்கிறார் ஆனால் அவரை பயன்படுத்தவில்லை, இதற்கானக் காரணமும் புரியவில்லை. நல்ல இந்தியப் பந்து வீச்சாளர்கள் இருந்தும் ஓவர்டனை எடுக்கின்றனர், கான்வேயை எடுக்க மாட்டேன் என்கிறார்கள்” என்று ஹர்பஜன் சாடியுள்ளார்.