மோசமான பேட்டிங்கால் மும்பையிடம் தோல்வி அடைந்தோம்: கொல்கத்தா கேப்டன் ரஹானே | We lost match against Mumbai due to poor batting Kolkata captain Rahane
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மோசமான பேட்டிங்கால் தோல்வி அடைந்தோம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்கிய ரஹானே தெரிவித்தார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக அங்கிரிஷ் ரகுவன்ஷி 26, ரமன்தீப் சிங் 22 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். பின்னர் விளையாடிய மும்பை அணி 12.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 13, ரியான் ரிக்கெல்டன் 62, வில் ஜேக்ஸ் 16, சூர்யகுமார் யாதவ் 27 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
4 விக்கெட்களை வீழ்த்திய மும்பை அணியின் அறிமுக வீரர் அஸ்வனி குமார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதுவரை மும்பை அணி 3 போட்டிகளில் விளையாடி 2 தோல்வி, ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. அதேபோல், கொல்கத்தா அணியும் 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்விகளைப் பெற்றுள்ளது.
இந்தத் தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் ரஹானே கூறியதாவது: இந்த ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாட வில்லை. மோசமான பேட்டிங் காரணமாக தோல்வி அடைந்தோம். எங்களது பேட்ஸ்மேன்கள் அனைவருமே மோசமாக விளையாடி விக்கெட்டை இழந்தனர். ஆனால், மும்பை ஆடுகளம் ரன்குவிக்க ஏற்றதாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் 180 முதல் 190 ரன்கள் எடுத்திருந்தால் அது சிறப்பானதாக இருந்திருக்கும். பவர்பிளே ஓவர்களில் 4 விக்கெட்களை நாங்கள் இழந்தது தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது. யாராவது ஒரு பேட்ஸ்மேனாவது களத்தில் நீண்ட நேரம் நின்றிருந்தால் ஸ்கோர் அதிகமாக வந்திருக்கும்.
ஆனால், எங்களது பேட்டிங் எதிர்பார்த்தபடி அமையவில்லை. இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ள நாங்கள் விரைவில் வெற்றிப் பாதைக்குத் திரும்புவோம்.
அதேபோல பவுலிங்கிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச முயன்றனர். ஆனாலும், மும்பை பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி வெற்றியைப் பெற்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.