பஞ்சாப் கிங்ஸுக்கு 2-வது வெற்றி: லக்னோவை எளிதில் வென்றது எப்படி? | second win for Punjab Kings in ipl 2025 How they beat lsg
லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 13-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 8 விக்கெட்டுகளில் எளிதில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. அந்த அணிக்கு இந்த சீசனில் இது 2-வது வெற்றியாக அமைந்துள்ளது. பஞ்சாப் அணி தரப்பில் பிரப்சிம்ரான் சிங், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், நேஹல் வதேரா ஆகியோர் சிறப்பாக பேட் செய்திருந்தனர்.
லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. லக்னோ அணியின் பலமே அதன் அதிரடி பேட்ஸ்மேன்கள் தான். ஆனால், பஞ்சாப் உடனான ஆட்டத்தில் அவர்கள் சீரான இடைவெளியில் அவர்கள் ஆட்டமிழந்தனர்.
மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் வீசிய முதல் ஓவரில் மார்ஷ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மார்க்ரம் 28, லக்னோ கேப்டன் ரிஷப் பந்த் 2, நிக்கோலஸ் பூரன் 44, டேவிட் மில்லர் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஆயுஷ் படோனி மற்றும் அப்துல் சமத் இணைந்து இறுதி ஓவர்களில் ரன் குவித்தனர். படோனி 33 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சமத், 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது லக்னோ.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக பிரியான்ஷ் மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். பிரியான்ஷ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் பேட் செய்ய வந்தார். மறுபக்கம் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 34 பந்துகளில் 69 ரன்களை அவர் குவித்தார். 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும்.
அவர் ஆட்டமிழந்த பின்னர் நேஹல் வதேரா களத்துக்கு வந்தார். அவர் பஞ்சாப் அணியின் இம்பேக்ட் வீரர். ஸ்ரேயாஸ் உடன் இணைந்து இறுதி வரை விக்கெட்டை கொடுக்காமல் அணியை வெற்றி பெற செய்தார். 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் 30 பந்துகளில் 52 மற்றும் நேஹல் வதேரா 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தார். இந்த ஆட்டத்துக்கு பிறகு புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி உள்ளது.