‘ஹைதராபாத்தின் அதிரடி தொடரும்’ – பயிற்சியாளர் வெட்டோரி அறிவிப்பு | sunrisers Hyderabad s attacking play will continue says Coach daniel Vettori
விசாகப்பட்டினம்: ஐபிஎல் லீக் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வி அடைந்தாலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டம் தொடரும் என்று அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்தார்.
விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி, ஒரு வெற்றி, 2 தோல்விகளைப் பெற்று 2 புள்ளிகளை எடுத்துள்ளது.
இதுகுறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறியதாவது: இந்த சீசனின் தொடக்க ஆட்டம் முதல் தற்போது வரை நாங்கள் அதிரடியாகவே விளையாடி வருகிறோம். அதிரடியாக விளையாடும் போக்கை மாற்றுவது குறித்து நாங்கள் எந்தவித ஆலோசனையையும் நடத்தவில்லை.
அதிரடியாக விளையாடும் போக்கை நாங்கள் மாற்ற மாட்டோம். எங்கள் அதிரடி ஆட்டம் இனி வரும் ஆட்டங்களிலும் தொடரும். எங்கள் முதல் 3 பேட்ஸ்மேன்கள் விளையாடுவதை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும்.
இதுபோன்று விளையாடும் போது தோல்வி ஏற்படும் என்பது தெரியும். நாங்கள் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம். இவ்வாறு வெட்டோரி தெரிவித்தார்.