கொல்கத்தாவை அலறவிட்ட மும்பை இந்தியன்ஸின் 23 வயது எக்ஸ்பிரஸ்: யார் இந்த அஸ்வனி குமார்? | Mumbai Indians 23 year old bowler ashwani kumar who made threat to kkr ipl 2025
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுக வீரராக களம் கண்ட இடது கை மித வேகப்பந்து வீச்சாளர் அஸ்வனி குமார் அமர்க்களம் செய்துள்ளார்.
திங்கள்கிழமை அன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானே, ரிங்கு சிங், மணிஷ் பாண்டே, ரஸ்ஸல் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார் அஸ்வனி குமார். அதன் மூலம் மும்பை அணி இந்த சீசனில் வெற்றிக் கணக்கை தொடங்கி உள்ளது. ஆட்ட நாயகன் விருதை அஸ்வனி குமார் வென்றார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
“அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்று, ஆட்ட நாயகன் விருதை வென்றது மிகப்பெரியது. நான் பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவன் நான். கடினமாக உழைத்து, கடவுளின் அருளால் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதே நேரத்தில் கொஞ்சம் பதட்டம் இருந்தது. எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி என் ஊர் மக்களை பெருமை கொள்ள செய்வேன்” என ஆட்ட நாயகன் விருதை வென்றதும் அஸ்வனி குமார் தெரிவித்தார்.
யார் இவர்? – உள்ளூர் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார் அஸ்வனி குமார். கடந்த 2022-ல் விஜய் ஹசாரே டிராபி மற்றும் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி இருந்தார். 2024 சீசனில் சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடி இருந்தார். எந்தவொரு பார்மெட்டிலும் மூன்று விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியது இல்லை. இந்த நிலையில் தான அறிமுகம் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.
பஞ்சாப் அணியின் பேக்-அப் பவுலராக இருந்தார். ஷெர்-இ-பஞ்சாப் டிராபி டி20 தொடரில் வொய்டு யார்க்கர்களை துல்லியமாக வீசி அசத்தினார். அதோடு பந்து வீச்சில் வேரியேஷனும் காட்டி இருந்தார். அந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக மட்டுமல்லாது தனது அணி சாம்பியன் பட்டம் வெற்றி பெற உதவினார். இது மும்பை இந்தியன்ஸ் அணியின் கவனத்தை ஈர்த்தது. அதன்படி அவர் இந்த சீசனுக்காக ரூ.30 லட்சத்துக்கு வாங்கி இருந்தது. அந்த அணியில் பும்ரா விளையாடாத நிலையில் அஸ்வினி குமார் தனது திறனை நிரூபித்துள்ளார். கடந்த வாரம் விக்னேஷ் புதூர் எனும் இளம் வீரர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அசத்தி இருந்தார். தற்போது அஸ்வனி குமார் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.