வான்கடேவில் வெற்றிக் கொடி கட்டிய மும்பை: கொல்கத்தாவை எளிதில் வீழ்த்தியது எப்படி? – MI vs KKR | mumbai indians thumping victory against kkr in wankhede ipl 2025
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 12-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எளிதாக வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பந்து வீச்சில் அஸ்வனி குமார் மற்றும் பேட்டிங்கில் ரிக்கல்டன் சிறந்து விளங்கினர். நடப்பு சீசனில் அந்த அணியின் முதல் வெற்றியாக அமைந்துள்ளது.
மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச முடிவு செய்தார். கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பவர்பிளே முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா. அந்த சரிவுக்கு பின்னர் அந்த அணியால் காம்பேக் கொடுக்க முடிவில்லை. அந்த அணி பேட்ஸ்மேன்கள் களத்துக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் அறிமுக வீரர் அஸ்வனி குமார் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரஹானே, ரிங்கு சிங், மணிஷ் பாண்டே மற்றும் ரஸ்ஸல் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். மும்பை தரப்பில் தீபக் சஹார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சான்ட்னர், ஹர்திக், போல்ட் மற்றும் விக்னேஷ் புதூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் விரட்டியது. இம்பேக்ட் வீரர் ரோஹித் சர்மா மற்றும் ரிக்கல்டன் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். ரோஹித் 13 ரன்களிலும், வில் ஜேக்ஸ் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 12.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது மும்பை.
ரிக்கல்டன், 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். சூரியகுமார் யாதவ் 9 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். நடப்பு சீசனில் இது மும்பை அணியின் முதல் வெற்றியாக அமைந்துள்ளது. சென்னை மற்றும் அகமதாபாத் நகரில் நடைபெற்ற போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியை தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது.