குஜராத் அணியில் மின்னும் தமிழக வைரங்கள்! | Tamil Nadu Players shine in the Gujarat Titans in IPL 2025
கடந்த வாரம் தொடங்கிய 18-வது ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் சீசன் களைகட்டி வருகிறது. பங்கேற்றுள்ள 10 அணிகளில் ஏறத்தாழ பெரும்பாலான அணிகள் முதல் வெற்றியைப் பெற்று தங்களது கணக்கைத் தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்த ஆண்டு அதிகமாக எதிர்பார்க்கப்படும் குஜராத் டைட்டன்ஸ் அணி, மும்பை அணிக்கெதிராக முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்கள் சாய் சுதர்ஷன், சாய் கிஷோர் இருவருமே அணியில் வைரங்களாக ஜொலிக்கின்றனர். அணியின் வெற்றியில் இருவருமே அதிக பங்கை சுமந்து அணியின் சொத்துகளாக மாறியுள்ளனர்.
கடந்த 17-வது ஆண்டு சீசனிலேயே கலக்கிய சாய் சுதர்ஷன், சாய் கிஷோர் இருவருமே இந்த ஆண்டின் முதல் 2 போட்டியிலும் தங்களது அபார முத்திரையைப் பதித்துள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் குஜராத் அணி தோல்வியைப் பெற்ற போதிலும் பேட்டிங்கில் ஜொலித்தார் சாய் சுதர்ஷன். இந்த ஆட்டத்தில் 74 ரன்களைக் குவித்து அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார். 41 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் எதிரணி பந்துவீச்சாளர்களை அச்சுறுத்தினார். பவுன்சர்கள், யார்க்கர்களை அபாரமாக வீசும் அர்ஷ்தீப் சிங், சுழற்பந்துவீச்சில் கைகொடுக்கும் கிளென் மேக்ஸ்வெல், யுவேந்திர சாஹல், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், அஸ்மத்துல்லா ஒமர்ஸாய் ஆகியோரது பந்துகளை மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் பறக்கவிட்டார்.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் தோல்வி கண்டபோதிலும் சாய் சுதர்ஷனின் பேட்டிங் ஆட்டத்தின் நுணுக்கம் பாராட்டப்பட்டது. அதைப் போலவே நேற்று முன்தினம், அகமதாபாத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியிலும் பட்டை தீட்டிய வைரம் போல ஜொலித்தார் சாய் சுதர்ஷன். 41 பந்துகளைச் சந்தித்த சாய் சுதர்ஷன், மும்பை அணிக்கெதிராக 63 ரன்களைக் குவித்தார். இதில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். அணி வீரர்களின் அதிகபட்ச ஸ்கோரும் சாய் சுதர்ஷனுடையதுதான். முக்கிய ஆட்டங்களில் சாய் சுதர்ஷனின் பேட்டிங் அணிக்கு கைகொடுத்து வருவது, அவர் மீது அணி நிர்வாகம் வைத்துள்ள நம்பிக்கையைப் பறைசாற்றுகிறது.
இந்த ஐபிஎல் போட்டித் தொடரில் 2 அரை சதங்களை விளாசியுள்ள சாய் சுதர்ஷன் இதுவரை, ஐபிஎல் போட்டிகளில் 8 அரை சதங்களை எடுத்துள்ளார். அவர் பங்கேற்ற கடைசி 6 ஐபிஎல் ஆட்டங்களில் முறையே 63 ரன்கள் (41 பந்துகள்), 74 (41 பந்துகள்), 103 (51 பந்துகள்), 6 (14 பந்துகள்), 84 (49 பந்துகள்), 65 ரன்களை (39 பந்துகள்) எடுத்து முக்கிய வீரராக தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்துள்ளார். லீக் ஆட்டங்களில் இன்னும் 12 ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில் அவரிடமிருந்து மேலும் சிறப்பான பேட்டிங் வெளிப்படும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை 27 ஐபிஎல் ஆட்டங்களில் 1,171 ரன்களைக் குவித்து அபாரமான சாதனையைப் புரிந்துள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும். மேலும் இந்திய அணிக்காக 3 சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும், ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார். அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த பந்துவீச்சாளர் சாய் கிஷோரும், அணி நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெற்று வருகிறார்.
பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் குஜராத் அணி தோல்வி கண்டபோதிலும் சாய் கிஷோர் 3 விக்கெட்களை வீழ்த்தி தனது பந்துவீச்சுத் திறனை வெளிப்படுத்தினார். அந்த ஆட்டத்தில் அஸ்மத்துல்லா ஒமர்ஸாய், கிளென் மேக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்களைச் சாய்த்தார் சாய் கிஷோர்.
மேலும், மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் 4 ஓவர்கள் பந்துவீசி 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். இதுவரை 12 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள சாய் கிஷோர் 17 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். இந்திய அணிக்காக 3 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் இவரது சிறப்பான பவுலிங்கின் காரணமாக இந்திய அணியில் இவர் நிரந்தரமாக இடம்பிடிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
சாய் சுதர்ஷனின் அபாரமான பேட்டிங் டெக்னிக், சாய் கிஷோரின் அபாரமான சுழற்பந்துவீச்சும் குஜராத் அணியின் வெற்றிக்கு பலமுறை கைகொடுத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இந்த 2 வீரர்களும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிக முக்கிய வீரர்களாக மாறியுள்ளனர் என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.