EBM News Tamil
Leading News Portal in Tamil

என்னதான் ஆச்சு சிஎஸ்கேவுக்கு? – IPL 2025 | what is wrong with csk in ipl 2025


ஐபிஎல் வரலாற்றில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக சிஎஸ்கேவின் கோட்டையாக திகழும் சேப்பாக்கம் மைதானத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 17 வருடங்களுக்கு பிறகு அந்த அணி ரஜத் பட்டிதார் தலைமையில் வெற்றியை வசப்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தின் வாயிலாக சிஎஸ்கே அணி தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளி உள்ளது ஆர்சிபி.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னர் சிஎஸ்கே சுழலில் ஆதிக்கம் செலுத்தும் அணி, ஆர்சிபி சுழலில் திணறக்கூடிய அணி என்ற கருத்து முன்னிறுத்தப்பட்டது. ஆனால் இந்த சித்தாந்தத்தை தகர்த்து எறிந்தது ஆர்சிபி. நூர் அகமது 4 ஓவர், ரவீந்திர ஜடேஜா 3, அஸ்வின் 2 ஆகியோர் கூட்டாக வீசிய 9 ஓவர்களில் 95 ரன்களை வேட்டையாடியது ஆர்சிபி. இந்த ரன் வேட்டையில் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், தேவ்தத் படிக்கல், பில் சால்ட் ஆகியோர் முக்கிய பங்குவகித்தனர்.

சுழற்பந்து வீச்சை நம்பியே ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்திருக்கக்கூடும். ஆனால் சுழலில் நூர் அகமது கைப்பற்றிய 3 விக்கெட்களை தவிர எந்தவித தாக்கமும் ஏற்படவில்லை. அஸ்வின் வீசிய ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே ஆர்சிபியின் தொடக்க வீரர் பில் சால்ட் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ள 16 ரன்கள் தாரை வார்க்கப்பட்டது. இது ஆர்சிபிக்கு உத்வேகம் கொடுத்தது.

நடுவரிசையில் ரஜத் பட்டிதார் கொடுத்த கேட்ச்சை 3 முறை சிஎஸ்கே வீரர்கள் கோட்டை விட்டனர். எளிதாக பிடிக்க வேண்டிய கேட்ச்சை தீபக் ஹூடா தவறவிட்டார். தொடர்ந்து ராகுல் திரிபாதி, கலீல் அகமது ஆகியோரும் தங்கள் பங்குக்கு கேட்ச்சை கோட்டை விட்டனர். இதற்கான பலனை சிஎஸ்கே அனுபவித்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிரனாவும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சேம் கரண் கடைசி ஓவரில் ரன்களை வாரி வழங்கினார்.

மொத்தத்தில் சிஎஸ்கேவின் சுழற்பந்து வீச்சு, வேகப்பந்து வீச்சு என இரண்டையுமே ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசை கடும் சிதைவுக்கு உட்படுத்தி 196 ரன்களை குவித்தது. சேப்பாக்கம் மைதான ஆடுகளத்தின் தன்மைக்கு இந்த இலக்கு அதிகமே. ஆனால் சொந்த மைதானத்தில் இந்த இலக்கை துரத்துவதற்கான உத்வேகம் சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசையில் துளி அளவும் இல்லாதது போன்றே காணப்பட்டது. ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் பலவீனமானவர்கள் என ஒரு தரப்பினர் கூறிய நிலையில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சில் ஆட்டம் கண்டது முரணாக இருந்தது.

புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள் ஆகியோரை உள்ளடக்கிய ஆர்சிபி வேகக்கூட்டணி சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசையை முடக்கியது, அதிலும் சுழலுக்கு சாதகமான சேப்பாக்கத்தில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தியதுதான் வியக்கவைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் பெரும்பாலான அணிகள் பேட்டிங்கில் தொடக்கத்திலேயே தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்தும் நிலையில் சிஎஸ்கே மட்டும் இன்னும் மரபுவழி ஆட்டத்தையே ஆயுதமாக வைத்துள்ளது.

டாப் ஆர்டரில் ரச்சின் ரவீந்திராவிடம் இருந்து எந்த ஒரு கட்டத்திலும் பெரிய அளவிலான அதிரடி ஆட்டம் வெளிப்படவில்லை. ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா ஆகியோரிடம் இருந்து மட்டை வீச்சில் எந்தவித பங்களிப்பும் வெளிப்படவில்லை. ஆல்ரவுண்டர் பணியை சேம் கரண் பேட்டிங்கில் பூர்த்தி செய்யவில்லை. ஷிவம் துபே, ஜடேஜா ஆகியோரும் பார்முக்கு திரும்பவில்லை. எல்லாவற்றையும் விட தோனியை 9-வது வீரராக களமிறக்கியது என்பது சிஎஸ்கேவின் குழப்ப நிலை போன்று தெரிந்தது. டெய்லண்டராக பயன்படுத்தப்பட்ட தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் விளாசி வியக்கவைத்தார். ஒரு கட்டத்தில் ஓவருக்கு 16 ரன்களுக்கு மேல் தேவையாக இருந்த நிலையில் அப்போது தோனியை களமிறக்காமல் அஸ்வினை களமிறக்கினர்.

அப்போது 7.1 ஓவர்கள் மீதம் இருந்தன. 43 பந்துகளில் 117 ரன்கள் தேவையாக இருந்தது. இந்த சூழ்நிலையில் தோனி களமிறக்கப்பட்டிருந்தால் அது ஆர்சிபி அணிக்கு சவாலாக இருந்திருக்கக்கூடும். அஸ்வின் 8 பந்துகளை சந்தித்து 11 ரன்களையும், ஜடேஜா 19 பந்துகளை சந்தித்து 25 ரன்களையும் மட்டுமே எடுத்தனர். இவர்கள் ஏறக்குறைய 5 ஓவர்களை வீணடித்தனர். இந்த ஓவர்களில் மட்டையை சுழற்றியிருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கக்கூடும். அஸ்வினும், ஜடேஜாவும் டி 20 உலகக் கோப்பையில் இனிமேல் இந்திய அணிக்காக விளையாட போவது இல்லை. அப்படி இருக்கும் போது தோனியை பேட்டிங் வரிசையில் ஏன் முன்கூட்டியே களமிறக்கக்கூடாது என ஆட்டம் முடிந்து வெளியேறிய ரசிகர்கள் வேதனை அடைந்ததை காண முடிந்தது.

வரும் ஆட்டங்களில் சிஎஸ்கே அணி சுழற்பந்து வீச்சை மட்டுமே நம்பியிருக்காமல் பேட்டிங்கில் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டால்தான் தொடரை உயிர்ப்பிப்புடன் வைத்திருக்க முடியும். ஏனெனில் லக்னோ, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் இந்த பார்முலாவைதான் கைகளில் எடுத்து வெற்றியை சுவைத்து வருகின்றன.