EBM News Tamil
Leading News Portal in Tamil

அன்று இளையோர் உலகக் கோப்பை வென்ற வீரர்; இன்று அம்பயர் – அனுபவம் பகிரும் தன்மய் ஸ்ரீவஸ்தவா | ex player now on field umpire Tanmay Srivastava shares his experience IPL 2025


மும்பை: கடந்த 2008-ல் இளையோர் (அண்டர் 19) உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரரான தன்மய் ஸ்ரீவஸ்தவா, இன்று ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனில் கள நடுவராக (அம்பயர்) செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தனது அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2008-ல் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, யு19 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அந்த தொடரில் ஆறு இன்னிங்ஸ் ஆடிய தன்மய் ஸ்ரீவஸ்தவா, 262 ரன்கள் எடுத்தார். அந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராக திகழ்ந்தார். இரண்டு அரை சதங்கள் இதில் அடங்கும். தற்போது அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் நடுவராக செயல்பட்டு வருகிறார்.

“என்னை ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி நீங்கள் எல்லோரும் பார்த்து இருப்பீர்கள். இப்போது இதே இடத்தில் என்னை நடுவராக பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். இதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். இது எனக்கு சர்ப்ரைஸும் கூட. இப்போது எனது ரோல் தான் இங்கு மாறி உள்ளது. நான் பிசிசிஐ நடுவர் குழுவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கம் வகிக்கிறேன்.

கொல்கத்தா – பெங்களூரு அணிகள் ஆடிய போட்டியில் நான் நடுவராக செயல்பட்டேன். கொல்கத்தாவில் கோலியை சந்தித்து பேசி இருந்தேன். 2008-ல் உலகக் கோப்பை வென்ற நாங்கள் எல்லோரும் இன்னும் தொடர்பில் இருக்கிறோம்” என தன்மய் தெரிவித்துள்ளார்.

இப்போது 35 வயதான அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப், கொச்சி மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் உள்ளிட்ட அணிகளில் அவர் இடம் பெற்றிருந்தார். உள்ளூர் கிரிக்கெட்டில் உத்தர பிரதேச அணிக்காக விளையாடியவர். 90 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் 4,918 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 10 சதங்கள் அடங்கும்.