நியூஸிலாந்திடம் பாகிஸ்தான் செம உதை – 22 ரன்களில் 7 விக்கெட்டுகள் இழப்பு! | Pakistan vs New Zealand 1st ODI Cricket – 7 wickets lost for 22 runs
நேப்பியரில் இன்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் நியூஸிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்று முன்னிலைப் பெற்றுள்ளது.
டாஸ் வென்று முதலில் நியூஸிலாந்தை பேட் செய்ய அழைத்தார் பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான். மார்க் சாப்மனின் அதிரடி 132 ரன்கள், டேரில் மிட்செலின் 76 ரன்கள், முகமது அப்பாஸின் 26 பந்து 52 ரன்களுடன் நியூஸிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 249 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்த 22 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 44.1 ஓவரில் 271 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது.
டாஸ் வென்று முதலில் நியூஸிலாந்தை பேட் செய்ய அழைத்தது தொடக்கத்தில் பெரிய முடிவாக அமைந்தது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் நசீம் ஷா, அகிஃப் ஜாவேத் பிரமாதமாக வீசி வில் யங், நிக் கெல்லி, ஹென்றி நிகோல்ஸ் விக்கெட்டுகளை மலிவாக வீழ்த்தியதில் 50/3 என்று தட்டுத் தடுமாறியது நியூஸிலாந்து. பாகிஸ்தான் 4 பவுலர்களையேக் கொண்டுள்ளது என்பதை நியூஸிலாந்து புரிந்து கொண்டது.
சாப்மன் மற்றும் மிட்செல் மிடில் ஓவர்களை ஒருவாறு கடத்தினர். ஒரு கட்டத்தில் சல்மான் ஆகாவை பந்துவீச்சுக்குக் கொண்டு வர வேண்டிய தேவை பாகிஸ்தானுக்கு இருந்தது. இவரைக் கொண்டு வந்தவுடன் மிட்செலும் சாப்மனும் இதற்காகவே காத்திருந்தது போல் அடித்துத் துவம்சம் செய்யத் தொடங்கினர்.
சல்மான் ஆகா 5 ஓவர்களில் 7 சிக்சர்கள் 2 பௌண்டரிகளை வாரி வழங்கி 67 ரன்களைக் கொடுக்க, இர்ஃபான் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் 5 ஓவர்களில் 51 ரன்களை வாரி வழங்க, இருவரும் சேர்ந்து 10 ஓவர்களில் 118 ரன்களை, மொத்தம் 9 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் வாரி வழங்கினர். சாப்மன், மிட்செல் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 199 ரன்களை 29 ஓவர்களில் விளாசினர்.
கடைசியில் சாப்மன் 111 பந்துகளில் 13 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 132 ரன்களையும் டேரில் மிட்செல் 84 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 76 ரன்களை விளாசினர். இவர்கள் இருவரும் வீழ்ந்தாலும் 21 வயது முகமது அப்பாஸ் இறங்கினார். இவரது காட்டடி பவர் ஹிட்டிங் 26 பந்துகளில் 52 ரன்களைப் பெற்றுத் தந்தது. இவர்கள் மூவரும் அடித்த அடியில் கடைசி 15 ஓவர்களில் நியூஸிலாந்து 166 ரன்களை விளாசி 344 ரன்களைக் குவித்தது.
இலக்கை பாகிஸ்தான் விரட்டும்போது அப்துல்லா ஷபிக், உஸ்மான் கான் செம தடவு தடவினாலும் பிற்பாடு செட்டில் ஆகி முறையே 36, மற்றும் 39 ரன்களை எடுக்க பாபர் அசாம் 83 பந்துகளில் 3 சிக்சர்கள் 5 நான்குகளுடன் 78 ரன்களை எடுக்க, கேப்டன் ரிஸ்வான் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சல்மான் ஆகா தன் மட்டமான பவுலிங்கிற்கு ஈடு கட்டும் விதத்தில் 48 பந்துகளில் 58 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் 38.3 ஓவர்களில் 249/3 என்று வெற்றியின் பார்வையில் இருந்தது.
4-வது விக்கெட்டாக பாபர் அசாம் ஆட்டமிழந்த பிறகே நேதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, ரூர்கே ஒரு விக்கெட்டையும், ஜேகப் டஃபி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, பாகிஸ்தான் அணி கடைசி 7 விக்கெட்டுகளை 22 ரன்களுக்கு இழந்து 271 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டது. ஆறே ஓவர்களில் பாகிஸ்தான் கதையை முடித்தது நியூஸிலாந்து. ஆட்ட நாயகனாக மார்க் சாப்மன் தேர்வு செய்யப்பட்டார்.