ரூ.4 கோடி பரிசு, அரசு வேலை, வீட்டு மனை… எது வேண்டும்? – மூன்றில் ஒன்றை தேர்வு செய்ய வினேஷ் போகத்துக்கு வலியுறுத்தல் | Rs 4 crore prize government job house and land which one for Vinesh Phogat
சண்டிகர்: ரூ.4 கோடி பரிசு, அரசு வேலை, இலவச வீட்டு மனை இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யுமாறு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை ஹரியானா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வினேஷ் போகத் கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். ஆனால், அரை இறுதிப் போட்டியின் கூடுதல் எடை காரணமாக அவர், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத், கடந்த ஆண்டு நடைபெற்ற ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி கண்டார்.
இந்நிலையில், சர்வதேச மல்யுத்தப் போட்டிகளில் சாதனை படைத்ததற்காக அவரை கவுரவிக்க ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது ரூ.4 கோடி பரிசு, அரசு வேலை, இலவச வீட்டு மனை ஆகிய 3 வாய்ப்புகளில் ஏதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அவர், விருப்பத்தின்படி அரசு நடந்துகொள்ளும் என்று முடிவு செய்யப்பட்டது.
ஹரியானா சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரின்போது பேசிய வினேஷ் போகத், சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தனக்கு ஹரியானா அரசு வெகுமதி தருவதாக அறிவித்திருந்தது. ஆனால், அதை இதுவரை செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பை முதல்வர் நயாப் சிங் நைனி நேற்று வெளியிட்டுள்ளார்.