4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்துல்: ஹைதராபாத்தை 190 ரன்களில் கட்டுப்படுத்திய லக்னோ | shardul thakur picks four wickets lsg restricted srh for 190 runs
ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 7-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் லக்னோ வீரர் ஷர்துல் தாக்குர். ஹைதராபாத் அணி 190 ரன்கள் எடுத்தது.
ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்தது. பெரிய அளவில் அனுபவம் இல்லாத லக்னோவின் பவுலிங் யூனிட் பவர் ஹீட்டர்கள் அதிகம் கொண்ட ஹைதராபாத் பேட்ஸ்மேன்களை எப்படி சமாளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே 300 ரன்கள் குவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷனை வீழ்த்தினார். அது அந்த அணியின் அதிரடி தொடக்க பாணியை கட்டுக்குள் வைத்தது. இருப்பினும் டிராவிஸ் ஹெட் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார்.
அவர் ஆட்டமிழந்ததும் கிளாஸன் களத்துக்கு வந்தார். நிதிஷ் உடன் சேர்ந்து சின்ன பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து துரதிர்ஷ்டவசமாக நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த போது ரன் அவுட் ஆனார். நிதிஷ் ரெட்டி அடித்த பந்தை தடுக்க முயன்றார் லக்னோ பவுலர் பிரின்ஸ் யாதவ். பந்து அவர் கையில் பட்டு ஸ்டம்ப்பை தகர்த்தது. கிரீஸுக்கு வெளியில் இருந்து கிளாஸன் அவுட் ஆனார். தொடர்ந்து 32 ரன்களில் நிதிஷ் ஆட்டமிழந்தார்.
அனிகேத் அதிரடியாக ஆடி 13 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து அபினவ் மனோகர், கம்மின்ஸ், ஷமி ஆகியோர் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் ஷர்துல் தாக்குர். அவர் இந்த சீசனில் மாற்று வீரராக லக்னோ அணியில் விளையாடி வருகிறார். ஆவேஷ், திக்வேஷ், ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தற்போது 191 ரன்கள் இலக்கை லக்னோ விரட்டி வருகிறது.