டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர்: அங்கூர் – அய்ஹிகா ஜோடி பிரதான சுற்றுக்கு முன்னேற்றம் | WTT Star Contender Ankur Ayhika pair advance to main round
சென்னை: டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் 2025 டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் தகுதி சுற்றின் 2-வது நாளான நேற்று கலப்பு இரட்டையர் பிரிவில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் ஆகாஷ் பால் – பொய்மண்டீ பைஸ்யா ஜோடி 3-0 (11-7, 11-6, 11-9) என்ற செட் கணக்கில் வைல்டு கார்டு ஜோடியான சகநாட்டைச் சேர்ந்த சார்த் மிஸ்ரா, சாயாலி வானி ஜோடியை வீழ்த்தி பிரதான சுற்றில் நுழைந்தது.
மற்ற இந்திய ஜோடிகளான அங்கூர் பட்டாச்சார்ஜி – அய்ஹிகா முகர்ஜி இணை 3-2 (1-11, 11-5, 9-11, 11-7, 11-8) என்ற செட் கணக்கில் அனிர்பன் கோஷ் – ஸ்வஸ்திகா கோஷ் ஜோடியை வீழ்த்தி பிரதான சுற்றில் கால்பதித்தது.
ஆடவர் இரட்டையர் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் அபிநந்த் பிரதிவாதி, ப்ரீயேஷ் சுரேஷ் ஜோடி 3-0 (11-3, 11-4, 11-4) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் தனிஷ் பெண்ட்சே, அர்மான் தலமால் ஜோடியை வீழ்த்தி பிரதான சுற்றில் நுழைந்தது. இதில் அபிநத்த் சென்னையை சேர்ந்தவர். இதேபோன்று இந்தியாவின் அங்கூர் பட்டாச்சார்ஜி, பாயாஸ் ஜெயின் ஜோடி 3-1 (12-10, 11-2, 14-16, 11-6) என்ற செட் கணக்கில் இத்தாலியின் ஜான் ஓய்போட், கார்லோ ரோஸ் ஜோடியை தோற்கடித்தது.
இந்தியாவின் நித்யா மணி, ராதா பிரியா கோயல் ஜோடி 3-1 (11-9, 11-9, 10-12, 11-6) என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ஜெனிபர் வர்க்கீஸ், திவ்யான்ஷி பவுமிக் ஜோடியை தோற்கடித்து பிரதான சுற்றில் கால்பதித்தது. மற்றொரு இந்திய ஜோடியான யாஷினி சிவசங்கர், செலினா செல்வகுமார் ஜோடி 3-0 (11-3, 11-5, 11-4) என்ற செட் கணக்கில் ஹாங் காங்கின் காங் ட்ஸ்லாம் லாம், லீ ஹோய் மேன் ஜோடியை வீழ்த்தி பிரதான சுற்றில் நுழைந்தது. இதில் நித்யா மணி, ராதா பிரியா கோயல், யாஷினி சிவசங்கர், செலினா செல்வகுமார் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் ஆவர். இன்று முதல் பிரதான சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன.